தமிழ்நாடு

tamil nadu

நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி: முதலமைச்சர் அறிவிப்பு

By

Published : Feb 26, 2021, 10:58 PM IST

சென்னை: கூட்டுறவு வங்கிகளில் 6 சவரன் நகை வரை அடகு வைத்த கடன், மகளிர் சுய உதவிக்குழு பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி
நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, "மக்களுடைய கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் என்னை சந்தித்து தாங்கள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய பயிர்க் கடனை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று அரசு 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் கூட்டுறவு கடனைத் தள்ளுபடி செய்தது. இதன் மூலம் 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் பயனடைவார்கள்.

நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி

வறட்சி, புயல், மழை போன்றவற்றால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய கடனை அரசு ரத்து செய்தது. அதேபோல் விவசாயிகள் தங்களின் பம்பு செட்டுகளுக்கு மும்முனை மின்சாரம் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று ஏப்ரல் 1ஆம் தேதி முதல் விவசாய பம்பு செட்டுகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் அளிக்கப்படும்.

ஏழை எளிய மக்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக தங்களின் நகைகளை கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைத்தனர். ஆகவே 6 சவரனுக்கு குறைவாக அடமானம் வைத்தவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்ய அறிவித்து உள்ளேன். மகளிர் சுய உதவி குழுக்கள் வாங்கிய கடனை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவி குழுக்கள் வாங்கிய கடனை ரத்து செய்ய சட்டப்பேரவையில் விதி எண் 110இன் கீழ் அறிவித்துள்ளேன். மக்கள் வைத்த கோரிக்கைகளை அரசு கவனமாக பரிசீலனை செய்து அதனை நடைமுறைப்படுத்தி வருகிறது.

ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தான் சொல்லி முதலமைச்சர் ரத்து செய்தார் என உண்மைக்கு புறம்பாக கூறிகிறார். ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள கொள்கையின் அடிப்படையில் தான் செயல்படுகிறோம். திமுக ஆட்சியில் இல்லாததால் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் ஆட்சியிலுள்ள நாங்கள் அதனை சிந்தித்து தான் அறிவிப்பாக வெளியிட முடியும். இதனை அவர் தெரிந்து கொண்டு பத்திரிக்கையின் வாயிலாக அறிவிப்பு வெளியிடுகிறார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசு மக்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து செய்து வருகிறது. மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தும் அரசு ஜெயலலிதாவின் அரசு.

நானும் விவசாய குடும்பம் என்பதால் மக்களின் கஷ்டங்களை அறிந்து அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் இதுபோன்ற திட்டங்களை அறிவித்து உள்ளேன்.

தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் கடன் வாங்கி தான் திட்டங்களை செயல்படுத்துகின்றன. எந்த மாநிலத்திலும் கையில் நிதியை வைத்துக் கொண்டு திட்டங்களை அறிவிப்பதில்லை. மக்களின் நலன் என்பது தான் முக்கியம். மக்களின் முக்கியத்துவத்தை கருதி அரசு அறிவிப்பை வெளியிடுகிறது. மத்திய அரசும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டனர். அப்போது மத்திய அரசும் கடனில் தான் இருந்தது. அதற்காக திட்டத்தை அறிவிக்காமல் இருந்தார்களா? கடன் வாங்காத மாநிலம் கிடையாது.

ஐந்து லட்சத்து 70 ஆயிரம் அரசு கடன் வாங்கியுள்ளது என்றால் வளர்ச்சி திட்டங்களுக்கு கடன் வாங்குகிறோம். கடன் வாங்கி திட்டங்களை செயல்படுத்தியதால் தான் ஜிடிபியில் உயர்ந்து உள்ளோம். உலக அளவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருந்தாலும் தமிழ்நாட்டை மீட்டெடுத்து மக்கள் சகஜ நிலையில் வாழும் நிலையை உருவாக்கி இருக்கிறோம். இதற்கு வளர்ச்சித் திட்டங்கள் தான் பயன்பட்டது.

2015ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 15 ஆயிரம் கோடி கடன் இருந்தது என ஸ்டாலின் ஒப்புக்கொண்டார். இன்றைய நிலைக்கு வளர்ச்சித் திட்டங்களுக்கு உரிய செலவினங்கள் அதிகரித்து உள்ளன. திமுக ஆட்சியிலும் உலக வங்கியில் கடன் வாங்கித்தான் திட்டங்களை நிறைவேற்றினார்கள். ஆண்டுதோறும் திட்ட செலவினங்களில் மதிப்பீடு அதிகரிக்கிறது. மக்களுக்கு தேவையான திட்டங்களை அரசின் கடமை என்பதால் அதனை செய்து வருகிறோம்.

திமுகவினர் தேர்தலின் போது கூறுவதுடன் சரி. விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார்களா? அல்லது சட்டப்பேரவையில் குரல் கொடுத்தார்களா? என்றால் இல்லை. தேர்தல் வந்தால் கூறுவார்கள்.

ஆனால் அதிமுகவை பொறுத்தவரை மக்களுக்கு அன்றைக்கு என்ன தேவை என்பதை அறிந்து செய்து வருகிறோம். தேர்தலுக்கும் இந்த அறிவிப்புகளுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. தேர்தல் அறிவித்த உடன் தேர்தல் அறிக்கைதான் வெளியிடப்படும். தமிழ்நாடு அரசு வாங்கிய கடன்களை குறைப்பதற்கு எதிர்காலத்தில் திட்டம் வைத்துள்ளோம்.

கூட்டுறவு சங்கங்களில் ரத்து செய்யப்பட்டுள்ள கடன் நபார்டு வங்கியில் இருந்து வாங்கியது. எனவே ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி அதனைப் பிரித்து கட்டுவோம். கடந்த முறை கடன் தள்ளுபடி செய்யப்பட்ட போதும் அவ்வாறு தான் செய்யப்பட்டது. அதேமுறை தற்போது பின்பற்றப்படும். விவசாய கடன் தள்ளுபடி செய்யப் பட்டதற்கான சான்றிதழ்கள் 75 விழுக்காடு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு விட்டது.

நாங்கள் இ டெண்டர் விட்டு வருகிறோம். உதாரணமாக காவிரி குண்டாறு திட்டத்தில் ரூ.350 கோடி தான் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளோம். ஒரு திட்டம் ஒரே ஆண்டில் நிறைவேற்றப்படாது. அதற்கு சில ஆண்டுகள் ஆகும். பல்வேறு திட்டங்கள் உலக வங்கியின் மூலம் நிறைவேற்றப்படுகின்றன. உலக வங்கி நிபந்தனைகளுக்கு உட்பட்டுத்தான் டெண்டர்விட முடியும். திமுக தலைவர் ஸ்டாலின் அரசியலுக்காக கூறுகிறாரே தவிர, அதில் எந்தவித ஊழலும் கிடையாது.

எதிர்க்கட்சிகள் அராஜகங்கள் செய்தும் ஐந்து ஆண்டுகள் ஆட்சி நடத்தி உள்ளோம். நான் முதலமைச்சராக பதவி ஏற்றவுடன் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் போது எதிர்க்கட்சியினர் எவ்வளவு அராஜகம் செய்தார்கள் என்பது தெரியும். பல முறை அதிமுக கட்சியை உடைப்பதற்கும் அவர்கள் சதி செய்தார்கள். எங்களிடம் இருந்த சில சட்டப்பேரவை உறுப்பினர்கள் திமுகவின் தூண்டுதலின் பேரில் வெளியே சென்றார்கள். அதன்பின் வந்த இடைத் தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக அரசு ஐந்தாண்டுகள் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது.

நான் பதவி ஏற்கும்போது கடுமையான வறட்சி இருந்தது. பின்னர் புயல், கரோனா பாதிப்பு ஏற்பட்டன. கரோனா காலத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மட்டுமே செய்து வைரஸ் தொற்று பரவாமல் கட்டுப்படுத்தினோம். இந்தியாவிலேயே ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் சிறப்பாக செயல்பட்டது தமிழ்நாடு அரசுதான் என பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

கரோனா தொற்று இருந்தபொழுது மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்க பல்வேறு திட்டங்களை வழங்கினோம். துன்பம் வரும்போது அதிமுக அரசு மக்களுக்கு பக்கபலமாக இருந்து செயல்படும் என்பதை நிரூபித்துக் காட்டி உள்ளது. காவல்துறை அதிகாரியின் பாலியல் துன்புறுத்தல் வழக்கு விசாரணை குறித்து கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது. அதுகுறித்த முழுமையான அறிக்கை வந்த பின்னர் தான் உண்மை தெரிய வரும்.

இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகத்தான் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி, தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் கொண்டு வந்தோம். இதனால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும். கரோனா காலத்திலும் தொழில் முதலீட்டு நிறுவனங்களை தமிழ்நாட்டிற்குள் இழுத்து வேலைவாய்ப்பு கிடைக்க ஏற்பாடு செய்தோம். அரசாங்கத்தின் மூலம் மட்டுமே முழுவதுமாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க முடியாது.

படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதற்கும் பொருளாதாரம் முன்னேற்றம் அடைவதற்கும் அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறந்த மாநிலமாக விளங்கி வருகிறது" என்றார்.

இதையும் படிங்க: 'தேர்தல் வருவதால் வாய்க்கு வந்ததையெல்லாம் கூறுகிறார் முதலமைச்சர்' - திமுக எம்.பி தயாநிதி மாறன்

ABOUT THE AUTHOR

...view details