சென்னை: ஜெயலலிதாவின் நினைவிடத் திறப்பு நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் பற்றி ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் ஒன்றைக் கூறியிருப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'எம்.ஜி.ஆர் மறைந்தபோது, அவர் அடக்கம் செய்யப்பட்ட நினைவிடம், அப்போது நிலவிய ஜானகி-ஜெயலலிதா கோஷ்டி சண்டையில் அம்போ என்றுவிடப்பட்டது. பின்னர், 1989-ல் ஆட்சிப்பொறுப்பேற்ற கருணாநிதி எம்.ஜி.ஆர். நினைவிடத்தைப் பராமரிக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். அதே பெருந்தன்மையோடுதான், ஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் விவகாரத்தில் நடந்து கொண்ட திமுக தலைவர் மீது, சேற்றை வாரி இறைப்பதைப் போல பேசியிருக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி.
ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவிற்கு வந்த கூட்டத்தினர், கருணாநிதியின் நினைவிடத்திற்கும் கூட்டம் கூட்டமாய் முண்டியடித்துக் கொண்டு சென்றதை தாங்கிக் கொள்ள முடியாத வயிற்றெரிச்சலில், இப்படி அண்ட புளுகு, ஆகாசப் புளுகு பேசியிருக்கிறார், முதலமைச்சர் பழனிசாமி.