தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஆறாம் கட்ட பொதுமுடக்கம் நாளையுடன் (ஜூலை 31) முடிவடையும் நிலையில் முதலமைச்சர் பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். இதில், பொதுமுடக்கம் தளர்த்தப்படுமா, சென்னையை தவிர பிற மாவட்டங்களில் பரவி வரும் கரோனா தடுப்பு குறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
கரோனா தொற்று தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆட்சியர்களுடன் ஆற்றிய முடிவுரையில், "கோவிட்-19 பெருந்தொற்று, உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிற இந்தத் தருணத்தில், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் சிறப்பான முறையில் சிகிச்சையளிக்கப்படுகிறது. கரோனா தொற்று பரவல் தமிழ்நாட்டில் கட்டுக்குள் உள்ளது. இறப்பு விழுக்காடு குறைந்துள்ளது.
கரோனா தொற்று பரவலைத் தடுக்க அரும்பாடு பட்டு வரும் மாவட்ட ஆட்சியர்கள், அலுவலர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கரோனா காலத்தில் மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி, சர்க்கரை, பருப்பு எண்ணெய் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் நியாய விலைக் கடைகளில் ஒருவருக்கு தலா இரண்டு முகக் கவசங்கள் வழங்கப்படவுள்ளன. சென்னை மாநகராட்சியில் குடிசை மாற்று வாரிய வீடுகளில் வசிக்கின்ற மக்களுக்கும், குடிசையில் வசிக்கின்ற ஏழை, எளிய மக்களுக்கும் விலையில்லா முகக்கவசம் வழங்கப்பட்டது. சென்னை மாநகரத்தில் கரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ளது. சென்னையில் 70, மற்ற மாவட்டங்களில் ஆயிரத்து 126 என மொத்தம் ஆயிரத்து 196 நடமாடும் மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்றார்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் பொது போக்குவரத்துக்கு அனுமதி? - மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை!