சென்னை விமான நிலையம் வந்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புதுச்சேரியில் மின்சார விநியோகத்தை தனியார் மையமாக்க வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவை எங்கள் அரசு ஏற்கவில்லை. இது தொடர்பாக மத்திய மின்சார துறை அமைச்சர் ஆர்.கே.சிங்கை சந்தித்தோம். புதுச்சேரி மின்சார துறையில் பணியாற்றும் ஊழியர்களுடன் சென்றிருந்தோம். மத்திய அமைச்சர் தொழிலாளர்களை சந்திக்க நேரம் ஒதுக்கி தரவில்லை. என்னையும் மின்சார துறை அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோரை சந்தித்தார்.
மாநிலங்களின் கருத்தை கேட்காமல் மத்திய அரசு எடுத்த இந்த முடிவு தன்னிச்சையானது, இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. மின்சார இழப்பு ஏற்படுவதாக கூறுவதை ஆராய நிபுணர் குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். மத்திய விவசாய அமைச்சர் தோமரை சந்தித்து, விவசாயிகளுக்கு நிலுவையிலுள்ள 8 கோடி ரூபாய் பயிர் காப்பீட்டு தொகையை தர வேண்டும் என வலியுறுத்தினேன்” என்றார்.
மேலும் பேசிய அவர், “புதுச்சேரி அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வில் 10 விழுக்காடு வழங்க தீர்மானம் நிறைவேற்றி கிரண்பேடிக்கு அனுப்பினோம். ஒப்புதல் தராமல் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார். மத்திய அரசு கொடுக்க முடியாது என்று தடுத்துள்ளது. தமிழ்நாட்டில் 7.5 விழுக்காட்டுக்கு ஒப்புதல் தந்து அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். புதுச்சேரி மாணவர்களுக்கு கிரண்பேடி செய்த துரோகத்தை தமிழ்நாடு, புதுச்சேரி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.