திமுக வட்டப் பொறுப்பாளர், பொதுக்குழு உறுப்பினர், இளைஞரணி அமைப்பாளர், இளைஞரணிச் செயலாளர், எம்.எல்.ஏ சென்னை மேயர், தளபதி, உள்ளாட்சித்துறை அமைச்சர், துணை முதலமைச்சர், திமுக பொருளாளர், செயல் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், திமுக தலைவர் என்று பல்வேறு பதவிகளைக் கடந்த ஸ்டாலின் தற்போது முதலமைச்சர் நாற்காலியில்.
”மு.க. ஸ்டாலினாகிய நான்” என்று அவர் சொல்வதைக் கேட்பதற்காக ஒட்டுமொத்த திமுக தொண்டர்களும் இத்தனை நாள்கள் காத்திருந்தனர். கருணாநிதி இருந்தவரை முதலமைச்சர் இடத்தில் ஸ்டாலினை வைத்துப் பார்க்க ஒரு தரப்பினர் விரும்பவில்லை.
ஆனால், இப்போது ஸ்டாலினை விட்டால் ஆளில்லை என்று அனைவரும் பெரும்பாலும் ஒப்புக்கொண்டுள்ளனர். காரணம், கருணாநிதி கூறியதுபோல் ஸ்டாலின் என்றால் உழைப்பு உழைப்பு உழைப்பு.
2019ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரையை, தேர்தல் நாளிலிருந்து ஒரு மாதத்திற்கு முன்பாகவே அவர் தொடங்கிவிட்டார். அதேபோல், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையையும் அவர் ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கினார்.
சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையை பொறுத்தவரை களத்திற்கு அவர் வந்து மைக் பிடிப்பதற்கு முன்பே மக்களின் பல்ஸை சமூக வலைதளங்கள் மூலம் பிடித்துவிட்டார். குறிப்பாக, ஒன்றிணைவோம் வா என்று செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மக்களிடையே குறிப்பிடத்தக்க வரவேற்பை பெற்றன.
அதேபோல், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டத்தின் மூலம் அவர் மக்களின் அருகில் சென்றுவிட்டார். இப்படி ஸ்டாலின் இந்தத் தேர்தலில் எடுத்துவைத்த ஒவ்வொரு அடியும், அவரின் அரசியல் அனுபவத்தை காண்பித்தது.
கட்சி ரீதியில் ஆளுமைமிக்க தலைவர் என்று அவர் தன்னை நிறுவிவிட்டார். முதல் முறை இப்போது தமிழ்நாட்டை ஆளப்போகிறார். ஆட்சியாளராக அவர் தன்னை சிறந்த ஆளுமையாக நிறுவியே ஆக வேண்டும். அப்போதுதான் பாரம்பரியமிக்க திமுக, தொடர்ந்து தமிழ்நாட்டு அரசியல் களத்தில் நிற்கும்.
கரோனா காலத்தில் மக்களுக்காக திமுகவினரை செயல்பட வைத்தது, தமிழ்நாடு சுயாட்சி உரிமைக்கு ஆபத்து வந்த போது எதிர் குரலாக ஒலித்தது, சாமானியர்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டுவந்த ஒவ்வொரு சட்டத்தையும் அறத்தோடு எதிர்த்தது என அவரது செயல்பாடுகள் அனைத்தும் ஒரு பக்குவப்பட்ட அரசியல் தலைவரை கண் முன்னே நிறுத்தின.
திமுகவின் கொள்கைக்கு அப்படியே நேர் மாறான கொள்கையைக் கொண்ட கட்சி மத்தியில் ஆட்சியில் இருக்கும்போது, மாநிலத்தின் பொறுப்பைக் கையில் வைத்திருக்கப்போகும் ஸ்டாலினின் செயல்பாடு எப்படி இருக்கும் என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்திருக்கிறது.
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற முழக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிநாதங்களில் ஒன்று. ஆனால் அதற்கான சூழல் இப்போது இல்லை.
தங்களுக்கு உடன்படாத கட்சி ஆட்சியில் இருக்கும் மாநிலத்தில் பாஜகவின் அரசியல் விளையாட்டு அதகளமாக இருக்கிறது. அதனை ஸ்டாலின் எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்பது அனைவர் மத்தியிலும் எழுந்திருக்கும் எதிர்பார்ப்பு.
முக்கியமாக தமிழ்நாட்டுக்கு 4.50 லட்சம் கோடி ரூபாய் கடன் இருப்பதாகத் தொடர்ந்து தகவல் வெளியாகிவரும் சூழலில் அந்தக் கடனை அவர் எப்படி சமாளிக்கப்போகிறார், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கரோனா பேரிடர் காலம் கம்பளம் விரித்து வரவேற்கக் காத்துக்கொண்டிருக்க அவர் எவ்வாறு செயல்படப்போகிறார் போன்ற பல கேள்விகள் உடன்பிறப்புகள் மத்தியில் மட்டும் இல்லாமல் அனைவரின் மனதிலும் இருக்கின்றன.