சென்னை:கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமான குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம், அண்ணா பிறந்த நாளான கடந்த செப்.15ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் அமலுக்கு வந்த நிலையில், குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் 1,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டு உள்ளது.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டப் பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார். ஒவ்வொரு பயனாளிகளுக்கும் தனித்தனியாக ஸ்பீட் போஸ்டில் முதலமைச்சரின் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது, “தங்களது அன்புக் கட்டளையால் தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தொண்டாற்றும் வாய்ப்பைப் பெற்ற உங்களின் அன்பு உடன்பிறப்பு, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உங்களுக்கு எழுதும் கடிதம். பேருந்தில் மகளிருக்கு கட்டணமில்லா விடியல் பயணம்,
அரசுப் பள்ளியில் படித்து உயர் கல்வி பயிலக் கல்லூரிக்கு வரும் புதுமைப் பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, நகைக்கடன் ரத்து, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவிகள், புதிய மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கம் என மகளிருக்கு ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தி வருவது 'திராவிட மாடல்' அரசு என்பதை நீங்கள் அறிவீர்கள். மகளிர் வாழ்க்கையில் மகத்தான மாற்றத்தை இத்திட்டங்கள் உருவாக்கி உள்ளன.