தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 12, 2023, 10:03 PM IST

ETV Bharat / state

பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு குறிப்பிட்ட காலத்தில் ஒப்புதல் வழங்க குடியரசுத் தலைவர் அறிவுரை வழங்க வேண்டும் என பிற மாநிலங்களிலும் தீர்மானம் நிறைவேற்ற பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!
பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!

சென்னை:சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு உரிய காலத்திற்குள் ஒப்புதல் வழங்க, மாநில ஆளுநர்களுக்கு மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் தகுந்த அறிவுரைகள் வழங்கிட வலியுறுத்தி 10.4.2023 அன்று நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானத்தை இணைத்து, அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாநில சட்டமன்றப் பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றிடக் கோரி பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

இந்த கடிதத்தில், “இந்தியாவில் மக்களாட்சி, இன்று முக்கியமான கட்டத்தில் உள்ளது. நமது நாட்டில் கூட்டாட்சித் தத்துவம் என்பது படிப்படியாக மறைந்து வருவதைக் காண்கிறோம். மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநரின் கடமைகள் குறித்தும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் கடமைகளையும், பொறுப்புகளையும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ள போதிலும், அவைகள் இப்போது மதிக்கப்படுவதோ அல்லது பின்பற்றப்படுவதோ இல்லை.

அதனால், மாநில அரசுகளின் செயல்பாடுகள் பெரிதும் பாதிக்கப்படுகிறது. மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்டு, ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல், சில மாநில ஆளுநர்கள் காலவரையின்றி நிலுவையில் வைத்திருப்பதால், அந்தந்த மாநில நிர்வாக செயல்பாடுகள், அந்த குறிப்பிட்ட இனங்களில் முடங்கிப் போயிருக்கிறது. மேலும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட ‘ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான மசோதா’ உள்ளிட்ட பல்வேறு சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்கும் பொருட்டு, ஆளுநர் எழுப்பிய சந்தேகங்களை பலமுறை தெளிவுபடுத்தியும், அந்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.

இதே நிலைதான், பல்வேறு மாநிலங்களிலும் உள்ளன. இந்தச் சூழ்நிலையில், அந்தந்த மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு, ஆளுநர்கள் ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயம் செய்யுமாறு மத்திய அரசு மற்றும் குடியரசுத் தலைவரை வலியுறுத்தி மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது ஏற்புடையதாக இருக்கும் என்று கருதி, அது சம்பந்தமாக 10.4.2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானத்தின் சாராம்சத்தையும் இந்த கடித்துடன் இணைத்து அனுப்பி உள்ளேன்.

இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நோக்கம் மற்ற மாநிலங்களுக்கும் ஏற்புடையதாக இருக்கும் என நம்புகிறேன். அவர்களது மாநில சட்டமன்றத்திலும் இதேபோன்ற தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம், மாநில அரசுகள் மற்றும் சட்டமன்றங்களின் இறையாண்மை மற்றும் சுயமரியாதையை நிலை நிறுத்துவதற்காக தங்கள் ஆதரவை வழங்குவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இரண்டு முறை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்க காலதாமதம் செய்ததாக, சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:"சட்டப்பேரவை இல்லை; மன்னராட்சி தர்பார்" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

ABOUT THE AUTHOR

...view details