சென்னை: தி.மு.க இளைஞரணியின் இருசக்கர வாகனப் பேரணியை முன்னிட்டு, கட்சியின் தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்,“ முக்கடல் தாலாட்டும் கன்னியாகுமரியில் வானுயர அய்யன் திருவள்ளுவர் சிலை வாழ்த்துவது போல, காந்தி மண்டபத்தின் அருகிலிருந்து உரிமைப் போர் முழக்கத்துடன் இந்த இரு சக்கர வாகனப் பேரணியை நவம்பர் 15 அன்று தொடங்கி வைத்திருக்கிறார், இளைஞரணியின் செயலாளரும் இளைஞர்நலன், விளையாட்டுத்துறை, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான உதயநிதி.
நவம்பர் 15-ஆம் நாள் குமரி முனையில் தொடங்கிய இந்தப் பேரணி, தென்மாவட்டங்களை உள்ளடக்கிய வள்ளுவர் மண்டலத்திலும், மேற்கு மாவட்டங்களை உள்ளடக்கிய பெரியார் மண்டலத்திலும், வட மாவட்டங்களை உள்ளடக்கிய அண்ணா மண்டலத்திலும், காவிரிப் படுகை மாவட்டங்களை உள்ளடக்கிய கலைஞர் மண்டலத்திலுமாக 234 தொகுதிகளுக்கும் 13 நாட்களில் சென்று, மொத்தமாக 8 ஆயிரத்து 647 கிலோ மீட்டர் பரப்புரை பயணம் மேற்கொண்டு, நவம்பர் 27 ஆம் நாள் சேலத்தில் நிறைவடைகிறது.
டிசம்பர் 17ஆம் நாள் சேலத்தில் இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு, மாநில உரிமை மீட்பு மாநாடாக எழுச்சிமிக்க இளையோரின் புது பாய்ச்சலுடன் நடைபெறவிருக்கிறது. சேலத்தில், 1944ஆம் ஆண்டு பெரியார் நடத்திய மாநாட்டில், அண்ணா முன்மொழிந்த ‘அண்ணாதுரை தீர்மானம்’ வாயிலாக ‘திராவிடர் கழகம்’ என நம் தாய்க் கழகத்திற்குப் பெயர் சூட்டப்பட்டது. அந்தக் கட்சியின் கொடியை உருவாக்கும்போது, கருப்பு நிறத்தின் நடுவே, தன் குருதியால் சிவப்பு வட்டம் வரைந்து கொள்கை உணர்வை வெளிப்படுத்தியவர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.
1949ஆம் ஆண்டு சென்னை ராபின்சன் பூங்காவில், திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கி வைத்தார் அண்ணா. அரசியல் களத்தில் வேகத்துடனும், வியூகத்துடனும் செயல்பட்ட காரணத்தால், 18 ஆண்டுகள் தி.மு.க தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்தது. தலைவர் கருணாநிதி ஆணையிட்டால் ஏவுகணை போல எதிரிக் கூட்டம் நோக்கிப் பாயும் பட்டாளமாக இளைஞரணி செயல்பட்டது.
1982ஆம் ஆண்டு, இளைஞரணியின் செயலாளராக உங்களில் ஒருவனான என்னை நியமித்தது கட்சித் தலைமை. அணியின் மாநிலத் துணை அமைப்பாளர்களாக திருச்சி சிவா, தாரை கே.எஸ்.மணியன், வாலாஜா அசேன் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர். திராவிட முன்னேற்றக் கழகம் அப்போது எதிர்கட்சியாக இருந்தது. தலைவர் கருணாநிதி சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராகவும், மக்கள் மனதில் தமிழினத் தலைவராகவும் வீற்றிருந்தார். தமிழ்நாட்டின் அரசியல் சக்கரத்தைச் சுழற்றும் அச்சாணியாகத் தலைவர் கருணாநிதி திகழ்ந்தார்.
பெரியார், அண்ணா, கருணாநிதி, பேராசிரியர் ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் பயணித்து திராவிடக் கொள்கைகளை விதைத்து, நீர் வார்த்து, வளர்த்தவர்கள். அந்த உணர்வை அடுத்த தலைமுறையிடம் ஊட்ட வேண்டும் என்பதற்காகவும், இளைஞரணியின் தலைமை அலுவலகமாக அன்பகம் கட்டடத்தைப் பெறுவதற்கான நிதி திரட்டவும், தமிழ்நாடு முழுவதும் உங்களில் ஒருவனான நான் பயணித்தேன்.