சென்னை: இந்திய விடுதலையின் பவள விழா ஆண்டில் மூவண்ணக் கொடியையும், விடுதலைக்காகப் பாடுபட்ட உண்மையான தியாகிகளையும் போற்றுவோம். தேசபக்தி என்ற லேபிளை ஒட்டிக்கொண்டு, தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடும் மூட அரசியல்தனத்தைச் சட்டப்படி அடக்குவோம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், “அரசின் மரபார்ந்த நடவடிக்கைகள் நடைபெறும் இடத்தில், மலிவான அரசியல் விளம்பரம் தேடுவதற்காக தமிழ்நாடு பாஜக-வின் தலைவரும் அவரது கட்சி நிர்வாகிகளும் குவிந்திருந்ததுடன், அதுகுறித்து அமைச்சரும் அதிகாரிகளும் கேள்வி எழுப்பியதற்காக, அடாவடியான செயல்களில் ஈடுபட்டு, தங்களின் தரம் என்ன என்பதையும், தங்களின் தேசபக்தி என்பது எத்தனை போலியானது என்பதையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
தேசியக் கொடி பொருத்தப்பட்ட நிதி அமைச்சர் பி.டி.ஆர் தியாக ராஜன் அமைச்சரின் கார் மீது செருப்பு வீசி, விடுதலைநாளின் பவள விழா மகத்துவத்தையே மலினப்படுத்தி இருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார். இறையாண்மைமிக்க ஒன்றிய அரசு - இறையாண்மை மிக்க மாநில அரசுகள் என்கிற அரசியல் சட்டத்தின் வழியே கூட்டாட்சிக் கருத்தியலை முன்னெடுக்கின்ற நிலையில், இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஒருமைப்பாட்டையும் மதவெறி அரசியலால் சிதைத்து விடலாம் என நினைப்பவர்கள், தாங்கள்தான் ‘தேசபக்திக்கு’ ஒட்டுமொத்த குத்தகைக்காரர்கள் என்பது போல நினைத்துக்கொண்டு, வரம்புமீறுவது வாடிக்கையாகி வருகிறது.
இந்திய இராணுவத்தில் பணியாற்றி, ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலை எதிர்கொண்டு வீரமரணம் அடைந்த தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த வீரர் இலட்சுமணன் அவர்களின் மறைவுக்கு, முதலமைச்சர் என்ற முறையில் என்னுடைய இரங்கலைத் தெரிவித்ததுடன், இராணுவ வீரரின் உடலுக்குச் செலுத்தப்பட வேண்டிய அரசின் மரபார்ந்த மரியாதையைச் செலுத்திடுமாறு தமிழ்நாடு அரசின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராசன் அவர்களைப் பணித்திருந்தேன்.
அமைச்சர் அவர்கள், அந்த வீரமகனை இழந்த குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன், மதுரை விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்ட இராணுவ வீரர் இலட்சுமணனின் உடலுக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் மலர் வளையம் வைத்து, வீரவணக்கம் செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசின் மரபார்ந்த நடவடிக்கைகள் நடைபெறும் இடத்தில், மலிவான அரசியல் விளம்பரம் தேடுவதற்காக தமிழ்நாடு பா.ஜ.க.வின் தலைவரும் அவரது கட்சி நிர்வாகிகளும் குவிந்திருந்ததுடன், அதுகுறித்து அமைச்சரும் அதிகாரிகளும் கேள்வி எழுப்பியதற்காக, அடாவடியான செயல்களில் ஈடுபட்டு, தங்களின் தரம் என்ன என்பதையும், தங்களின் தேசபக்தி என்பது எத்தனை போலியானது என்பதையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தேசியக் கொடி பொருத்தப்பட்ட அமைச்சரின் கார் மீது செருப்பு வீசி, விடுதலைநாளின் பவள விழா மகத்துவத்தையே மலினப்படுத்தி இருக்கிறார்கள்.