சென்னை: சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும், கடந்த மே 23ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் சென்றார். இவ்வாறு இரண்டு நாள் சிங்கப்பூர் அரசு முறை பயணத்தை முடித்த முதலமைச்சர், நேற்றைய முன்தினம் (மே 25) இரவு ஜப்பான் நாட்டின் ஒசாகா மாகாணம் வந்தடைந்தார்.
இதனைத் தொடர்ந்து நேற்று (மே 26) காலை ஒசாகாவில், ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன் (JETRO) இணைந்து நடத்தப்பட்ட மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் கலந்து கொண்டார். அதில், தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்ளவும், சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்து உரையாற்றினார்.
இதனையடுத்து, தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கும், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும் இடையே முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், கோமாட்சு நிறுவனம் கட்டுமானம் மற்றும் சுரங்க உபகரணங்கள் தயாரிப்புத் துறையில் உலகளவில் சிறந்து விளங்கும் நிறுவனமாகும். இந்த நிறுவனம் தொழில்துறை இயந்திரங்கள், வாகன தளவாடங்கள் மற்றும் மின்னணுவியல் போன்ற பிற வணிகங்களிலும் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிறுவனம், தமிழ்நாட்டில் கோமாட்சு இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ஒரகடம் சிப்காட் தொழிற்பேட்டையில் டம்ப் டிரக், சுரங்க உபகரணங்கள் மற்றும் ஹைட்ராலிக் அகழ்வாராய்வு இயந்திரம் போன்றவற்றை உலகளாவிய தர நிலையுடன் தயாரித்து, உள்நாடு மற்றும் சர்வதேச சந்தைத் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. எனவே, ஒசாகாவில் அமைந்துள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார்.