தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் இன்று பதவியேற்றார். சென்னை கிண்டி ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மு.க. ஸ்டாலினுக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செய்து வைத்தார்.
பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்த பிறகு, துரைமுருகன், கே.என். நேரு உள்ளிட்ட அமைச்சர்களுடன் கோபாலபுரம் இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வந்தார். அங்கு திரண்டிருந்த கட்சி தொண்டர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர், வீட்டுக்குள் சென்று தன் தாயார் தயாளு அம்மாளிடம் முதலமைச்சர் ஆசி பெற்றார். தொடர்ந்து, அவரின் தந்தையும் மறைந்த முன்னாள் முதலமைச்சரான கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி மற்றும் அண்ணா நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்திய அவர், வேப்பேரி பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பெரியார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அப்போது தி.க தலைவர் வீரமணி மு.க. ஸ்டாலினை பாராட்டி புத்தகத்தை வழங்கினார். இதனைத் தொடர்ந்து, மறைந்த பேராசிரியர் அன்பழகன் வீடு மற்றும் தலைமை செயலகத்திற்கு சென்றார்.