சென்னை: சென்னையில் நடைபெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் இல்ல திருமண விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (13.09.2023) கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய் அவர்; “கரானோ என்ற பெரும் நோய் தொற்றிய காலத்தில் உலகமே சிக்கித் தவித்த நேரத்தில் நமது தமிழ்நாடும் சிக்கித் தவித்தது என்பதை மறந்திருக்க மாட்டீர்கள்.
கரோனா காலத்தில் தமிழ்நாட்டில் நடந்த அட்சி அதிமுக ஆட்சி. அவர்கள் ஆட்சியில் இருந்தார்களே தவிர, கரோனாவை கட்டுப்படுத்துகின்ற முயற்சியில் ஈடுபட்டார்களா என்று கேட்டீர்கள் என்றால் இல்லை. ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்கட்சியாக இருந்த போது மக்கள் பணியை எந்த அளவிக்கு ஆற்றியிருக்கிறது என்பதற்கு ஒரே ஒரு உதாரணம், கரோனா காலத்தில் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய மக்களுக்கு துணை நிற்கக்கூடிய வகையில் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி அதன் மூலமாக மக்களுக்கு என்னென்ன தேவைகள் ஏற்படுகிறதோ, அவை அத்தனையும் செய்து கொடுத்த ஒரு கட்சி தான் இன்றைக்கு ஆட்சிப் பொறுப்பில் இருக்கக்கூடிய திமுக என்பதை நான் பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன்.
அதில் ஓரளவிற்கு வெற்றி பெற்றோம் என்று சொன்னால், தங்கபாண்டியன் போன்றவர்கள், அவருடைய இராஜபாளையம் தொகுதியில் இருக்கக்கூடிய மக்களுக்கு அவர் ஆற்றிய பணிகள் எல்லாம் தலைமைக் கழகத்தின் மூலமாக நானும் அறிந்தேன். அதற்கான பாராட்டுக்களை இந்த நேரத்தில் தங்கபாண்டியனுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
திமுக-வை பொறுத்தவரைக்கும், ஆட்சியில் இருந்தாலும் சரி, ஆட்சியில் இல்லையென்று சொன்னாலும் சரி, மக்களைப் பற்றி சிந்திக்கின்ற, மக்களைப் பற்றி கவலைப்படுகிற ஒரு கட்சி தான் திமுக. அதனால் தான் தொடர்ந்து வெற்றியை நாம் இன்றைக்கு பெற்று வருகிறோம்.
நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு மிகப் பெரிய வெற்றி தமிழ்நாட்டு மக்கள் நமக்கு தேடித் தந்தார்கள். அதற்குப் பின்னால் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 6வது முறையாக நம்முடைய திமுக ஆட்சி வருவதற்கு மக்கள் சிறப்பான ஆதரவை தந்தார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு, உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அந்த உள்ளாட்சி தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை நாம் பெற்றிருக்கிறோம். அதற்குப்பிறகு நடைபெற்ற இடைத்தேர்தலிலும் மிகப் பெரிய வெற்றியை நாம் பெற்றோம்.
இப்படி தொடர்ந்து வெற்றியை பெறுவதற்கு காரணம் என்னவென்று கேட்டீர்கள் என்றால், நாம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, நாம் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன திட்டங்களை, என்னென்ன பணிகளை மக்களுக்கு செய்யப் போகிறோம் என்று வாக்குறுதிகளை தந்தோம். அதை நம்பி தமிழ்நாட்டு மக்கள் நமக்கு ஆதரவு தந்தார்கள். வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு வாக்குறுதிகளை இன்றைக்கு படிப்படியாக நிறைவேற்றிக் காட்டியிருக்கிறோம்.
இன்னும் சொல்கிறேன் 100க்கு 99 சதவீதம் இதுவரையில் நாம் தந்த வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறோம். மீதம் இருக்கிற 1 சதவீதம் வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி நூற்றுக்கு நூறு சதவிகிதம் நிறைவேற்றக்கூடிய திட்டமாகத்தான் “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” நிறைவேற்றப்பட இருக்கிறது என்பதையும் நான் இங்கே மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ளகிறேன்.
இப்படி எத்தனையோ திட்டங்கள் “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” மட்டுமல்ல, மகளிர் இலவசமாக பேருந்தில் பயணம் செய்வதற்கு “விடியல் திட்டம்” என்ற பெயரில் அதை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். அதற்கு பின் “புதுமைப் பெண் திட்டம்” பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டம் அதையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். அதேபோல், “நான் முதல்வன்” திட்டம் இன்றைக்கு இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரக்கூடிய, அவர்களுக்கு பயிற்சியை தரக்கூடிய, அந்தத் திட்டம் இன்றைக்கு செயல்பட்டு கொண்டிருக்கிறது.