தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“தலித் பத்திரிகையாளர்களின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவாக இருக்கிறது” - முதலமைச்சர் ஸ்டாலின் - தி சேஞ்சிங் மிடியா ஸ்கேப்

CM MK Stalin speech at Kerala Media Academy event: தலித் பத்திரிகையாளர்களின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவாக இருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 8, 2023, 10:48 PM IST

சென்னை: சென்னை சேத்துப்பட்டில் கேரள அகாடமி மற்றும் மலையாளி சங்கம் சார்பில் ஊடக சந்திப்பு 2023 நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பத்திரிகையாளர் பி.ஆர்.பி.பாஸ்கர் எழுதிய “The Changing Mediascape” என்ற ஆங்கில புத்தகத்தை வெளியிட்டார்.

பின்பு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “தி சேஞ்சிங் மீடியா ஸ்கேப்” புத்தகத்தை வெளியிடுவதில் நான் பெருமை கொள்கிறேன். ஊடகத்தினரை உருவாக்குவதில் மலையாள அகாடமி முக்கிய பங்காற்றுகிறது. இந்த விழாவில் பங்கேற்றதில் நான் பெருமை அடைகிறேன். கருணாநிதியின் நெருக்கமான நன்பராக இருந்தவர் பத்திரிகையாளர் அருண்ராம்.

ஊடகத்தினர் சுதந்திரமாக செயல்பட்டால்தான் நாட்டின் ஜனநாயகம் உயிர்ப்போடு இருக்கும். தற்போது, பத்திரிகைத் துறையில் பெண்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். ஆனால், தலித் பத்திரிகையாளர்களின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவாக இருக்கிறது” என்றார்.

மேலும், “இதனை உணர்ந்துதான் ஒடுக்கப்பட்ட சமூகத்து இளைஞர்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் படித்தவர்களில் இதழியல் ஆர்வம் கொண்டவர்களுக்கு இலவசமாக இதழியல் பயிற்சியை லயோலா கல்லூரியுடன் இணைந்து தமிழ்நாடு அரசு வழங்கியது. மேலும், சார்புத் தன்மை இல்லாத மதச்சார்பின்மையை போற்றுகின்ற ஊடகவியலாளர்களை உருவாக்குவது என்பது, தற்போது இருக்கும் நிலைமையில் இது மிகவும் தேவையான ஒன்று.

இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு இன்று ஆபத்து வந்துள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற தத்துவத்துக்கு ஆபத்து வந்துள்ளது. மதச்சார்பின்மைக்கு ஆபத்து வந்துள்ளது. இவை அனைத்தையும் சிதைப்பதன் மூலமாக இந்தியாவை சிதைக்கப் பார்க்கிறார்கள். இதனை அரசியல் தளத்தில் அரசியல் இயக்கங்களாகிய நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இந்தியாவைக் காப்பாற்றும் பணியில் ஊடகங்களும், தங்களது பங்களிப்பைச் செலுத்த வேண்டும் என்று இந்த நிகழ்ச்சியின் மூலமாக நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

ஆட்சிப்பொறுப்பிற்கு வந்த பிறகு இந்திய அரசியலமைப்புச் சட்டம்தான் என்னுடைய வேதம் என்று சொல்லி நாடாளுமன்றத்தையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் வணங்கியவர், பிரதமர். இப்போது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவே செயல்பட்டு கொண்டிருக்கிறார். இதனை நாட்டில் உள்ள அனைத்து மக்களும் உணர்ந்து இந்த போக்கை எதிர்க்க வேண்டும்.

இங்கு கூடியிருக்கும் எனது மலையாள சொந்தங்களுக்கும் கேரளத்தில் வாழக்கூடிய சொந்தங்களுக்கும் நான் சொல்லிக்கொள்வது, தமிழ்நாடும் கேரளமும் நாட்டைக் காக்கின்ற முயற்சியில் இரட்டைக்குழல் துப்பாக்கியாக செயல்பட்டு ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் விடியலை ஏற்படுத்தி தர வேண்டும். அதேபோல் ஊடகங்களும், பொய் பரப்புரைகளுக்கும், திசை திருப்புபவர்களுக்கும் முக்கியத்துவம் தராமல் விடுதலைப் போராட்டக் காலத்தில் செயல்பட்டதைப் போல மீண்டும் செயல்பட வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்.

இதையும் படிங்க:சாத்தான்குளம் வழக்கு: உதவி ஆய்வாளரின் ஜாமீன் மனு 5வது முறையாக தள்ளுபடி!

ABOUT THE AUTHOR

...view details