தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேரிடர் காலத்திலும் எதிர்கட்சித் தலைவர் மலிவான அரசியல் செய்கிறார் - முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கு! - முக ஸ்டாலின்

Tamil Nadu Chief Minister M.K.Stalin: சென்னை தொன்பாஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, பேரிடர் காலத்திலும் அரசுக்கு உதவாமல் மலிவான அரசியல் செய்கிறார் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி என கூறினார்.

Tamil Nadu Chief Minister M.K.Stalin
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 22, 2023, 8:43 PM IST

Updated : Dec 22, 2023, 9:06 PM IST

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.22) மாலை பெரம்பூர் தொன்பாஸ்கோ பள்ளி வளாகத்தில் திமுக சிறுபான்மை நல உரிமைப் பிரிவு சார்பில் நடத்தப்பட்ட “அன்பின் இனிய கிறிஸ்துமஸ் பெருவிழா – 2023”-இல் கலந்து கொண்டு தலைமை உரை ஆற்றினார்.

மேடையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “அன்பின் கிறித்துவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். அண்மையில் சென்னையிலும், சுற்றியுள்ள மாவட்டங்களிலும் வெள்ளம் வந்தபோது, மக்கள் எல்லோருக்கும் அரசின் சார்பில் நிவாரணப் பொருட்களை வழங்கினோம். உண்மையான அக்கறையோடு செய்தோம். அமைச்சர்களில் இருந்து அதிகாரிகள் வரைக்கும், மக்களோடு மக்களாக களத்திலேயே இருந்து செயல்பட்டார்கள்.

இதேமாதிரிதான் திமுக தொண்டர்கள், நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் என எல்லோரும் இரவு, பகல் பார்க்காமல் உழைத்தார்கள். சமூக சேவை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், தன்னார்வ தொண்டர்கள் என்று எல்லாரும் மக்களுக்காக உழைத்தார்கள். மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டதும், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6,000 வழங்கப்படும் என்று அறிவித்தோம்.

அறிவித்து இரண்டு வாரத்துக்குள் கொடுத்த ஆட்சிதான், நம்முடைய திராவிட மாடல் ஆட்சி. நான் வரும்போது தொலைபேசியில் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு சென்னை, சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு அறிவித்தோமே, எந்த அளவுக்குக் கொடுத்திருக்கிறோம் என்று கேட்டேன். 98 சதவீதம் கொடுத்து விட்டதாகச் சொன்னார்கள்.

மீண்டும் 5 லட்சம் பேர் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அவர்களது கோரிக்கையும் விரைவில் பரிசீலிக்கப்பட்டு, உரிய வகையில் வழங்கப்படும். மத்திய அரசிடம் இருந்து நிதி வரட்டும் என்று காத்திருக்காமல், மத்திய அரசு இன்னும் நிதி தரவில்லை என்று காரணம் சொல்லாமல் உடனடியாக கொடுத்தோம்.

இதற்கிடையில், தென் மாவட்டங்களிலும் மழை வெள்ளம் வந்தது. அந்த மக்களுக்கும் இழப்பீடு அறிவித்திருக்கிறேன். அவர்களுக்கும் விரைவில் கொடுக்கப் போகிறோம். அந்த மக்களை போய் நான் பார்த்தபோது, அரசு இயந்திரம் உடனடியாக செயல்பட்டு, எங்களைக் காப்பாற்றி விட்டது என்று சொன்னார்கள்.

அவர்களின் முகங்களில் மகிழ்ச்சியைப் பார்த்தபோதுதான் எனக்கு கொஞ்சம் நிம்மதி வந்தது. பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி கொண்டிருக்கும் அந்த மக்கள், எங்களை இன்முகத்தோடு வரவேற்றார்கள். அதையெல்லாம் பார்த்தபோது நான் பூரித்துப் போனேன்.

ஆனால், இன்று அர்த்தம் இல்லாத குறைகளைச் சொல்கிறார்கள். நூற்றாண்டு காணாத மழை பெய்யும்போது இது மாதிரியான பேரிடர் ஏற்படும் நேரத்தில் அரசுக்கு உதவியாக எந்த கட்சியாக இருந்தாலும், அது எதிர்கட்சியான அதிமுகவாக இருந்தாலும் அரசுக்கு துணை நின்றிருக்க வேண்டும்.

அரசுடன் இருந்து மக்களுக்குப் பணியாற்றி இருக்க வேண்டும். அப்படி யாராவது வந்தார்களா என்றால் இல்லை. கரோனா காலக்கட்டத்தில் ஆட்சியில் இருந்தபோதும் அவர்கள் இல்லை. எதிர்கட்சியாக இருந்த திமுகதான் முன்னின்று “ஒன்றிணைவோம் வா” என்ற திட்டத்தை அறிவித்து செயலாற்றியது. அதை நீங்கள் எல்லாம் மறந்திருக்க மாட்டீர்கள்.

இந்த மாதிரி நேரத்திலும் மலிவான அரசியல் செய்ய முன்னால் வந்து விடுகிறார், எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி. சில நாட்களுக்கு முன் நடந்த ஒரு விழாவில், சிறுபான்மை மக்களின் பாதுகாவலன் அதிமுகதான் என்று பழனிசாமி பேசி இருக்கிறார். சிறுபான்மை மக்கள் மேல் அவருக்கு திடீரென்று பாசம் பொங்குகிறது.

குடியுரிமைத் திருத்தச் சட்டம், காஷ்மீர் சிறப்புரிமை ரத்து, முத்தலாக் என்று எல்லா சட்டங்களையும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்தவர், பழனிசாமி. கூட்டணி தர்மத்திற்காக ஆதரிக்க வேண்டியதாக இருந்தது என்று சப்பைக்கட்டு கட்டினார். இப்போதுதான் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று ஒரு கபட நாடகம் போட்டுக்கொண்டு இருக்கிறாரே, பாஜகவை எதிர்த்து ஒரு வார்த்தையாவது பேசியிருக்கிறாரா? இல்லையே. இவரின் நாடகத்தை எல்லாம் பார்த்து மக்கள் யாரும் ஏமாற மாட்டார்கள்.

இந்தியா கூட்டணிதான் அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய அளவில் ஆட்சியை அமைக்கும் இந்தியா கூட்டணியின் ஆட்சி அமைய நாம் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும். அதற்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க:5 நாட்களுக்குப் பின் தொடங்கிய திருச்செந்தூர் - தூத்துக்குடி பேருந்து சேவை!

Last Updated : Dec 22, 2023, 9:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details