தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“சில சக்திகளின் கைப்பாவையாக ஆளுநர் செயல்படுவதை தவிர்க்க வேண்டும்” - முதலமைச்சர் ஸ்டாலின்

CM Stalin: தமிழகத்திற்கு எதிரான சில சக்திகளின் கைப்பாவையாக ஆளுநர் செயல்படுவதைத் தவிர்த்து, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அவர் உறுதுணையாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

CM Stalin talks about Governor Ravi
ஆளுநர் ரவி குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 16, 2023, 11:52 AM IST

சென்னை:தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரபல ஆங்கில நாளிதழுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில், தமிழக முதலமைச்சரும், ஆளுநரும் கலந்து பேசி, நிர்வாகத்தில் இருக்கும் முட்டுக்கட்டைகளைக் களைய வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், ஆளுநர் தங்களை பேச அழைத்திருப்பதன் மூலம், அரசு நிர்வாகத்தில் இருக்கும் சிக்கல்களை களைய முடியும் என நம்புகிறீர்களா என கேள்வி எழுப்பப்ட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், "ஆளுநர் தமிழ்நாட்டிற்கு வந்தபிறகு பல முறை அவரை நான் சந்தித்து இருக்கிறேன், பேசியும் இருக்கிறேன். மேலும், அரசு விழாக்களிலும் இருவரும் பல முறை பங்கெடுத்து இருக்கிறோம். அப்போதெல்லாம் என்னிடம் அவர் இனிமையாகத்தான் பேசிப் பழகினார். எனவே, நாங்கள் இருவரும் சந்திப்பதல்ல இங்கு பிரச்னை.

ஆளுநர் மனம் மாற வேண்டும். அவர் தமிழ்நாட்டின் நன்மைக்காக செயல்பட வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்கும், சிந்தனைக்கும், வளர்ச்சிக்கும் எதிரான சில சக்திகளின் கைப்பாவையாக ஆளுநர் செயல்படுவதைத் தவிர்த்து, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அவர் உறுதுணையாக இருக்க வேண்டும். இதுவே எனது வேண்டுகோள்" என பதிலளித்தார்.

அதைத் தொடர்ந்து, மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகளும், பாஜக நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதைத் தடுக்க முடியாது என்ற நிலையை உருவாக்கி உள்ளதாக கருதப்படும் நிலையில், இந்தியா கூட்டணியின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தாங்கள் நம்புகிறீர்கள் என்ற கேள்விக்கு, "மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் என்பது சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மட்டுமே.

இது ஒருபோதும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவை பாதிக்காது. பொதுவாக சட்டமன்றத் தேர்தலின்போது, மாநிலப் பிரச்சினைகள் மட்டுமே பெரிதாக பார்க்கப்படும். மேலும், ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக வென்றிருந்தாலும், காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்குமான வாக்கு வித்தியாசம் 10 லட்சம்தான். சத்தீஸ்கரில் 6 லட்சம் வாக்குகளைத்தான் பாஜக அதிகம் பெற்றுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் மட்டுமே கூடுதலாக 35 லட்சம் வாக்குகளைக் பெற்றுள்ளது.

பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல், ஒருமுகப்பட்டிருக்குமானால் இந்த மூன்று மாநில வெற்றியை பாஜக பெற்றிருக்க முடியாது என்பதுதான் நிதர்சன உண்மை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-வுக்கு எதிரான வாக்குகளை அனைத்து மாநிலங்களிலும் ஒன்று சேர்க்கும் முயற்சிகளை 'இந்தியா' கூட்டணி செய்யும். அதன் வாயிலாக நாடாளுமன்றத் தேர்தலில் முழுமையான வெற்றியை நாங்கள் பெறுவோம்" என பதிலளித்துள்ளார்.

இதையும் படிங்க:10 ஆண்டுகளுக்கு மேலாக வீட்டுமனை பட்டா வழங்காததால் பள்ளி மாணவர்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்!

ABOUT THE AUTHOR

...view details