சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜூன் 13) தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் சென்னைக்கான முதல் காலநிலை செயல் திட்ட கையேட்டினை வெளியிட்டார். இந்தத் திட்டம், 2050ஆம் ஆண்டிற்குள் சென்னை மாநகரம் கார்பன் சமன்பாட்டை எட்டுவதற்கும், தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்பு நோக்கமான 2070 ஆண்டிற்குள் கார்பன் உமிழ்வை பூஜ்ஜியமாக குறைக்கும் இலக்கை எட்டுவதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பருவநிலை மாற்றம் தொடர்பான பன்னாட்டு அரசுகளின் குழு (ஐபிசிசி) கடல் மட்ட உயர்வு, கடுமையான அதிக வெப்பநிலை மற்றும் சென்னை போன்ற கடலோர நகரங்களுக்கு காலநிலை பாதிப்புகளால் ஏற்படும் அபாயங்கள் ஆகியவற்றால் கடுமையான சேதங்கள் வரவிருப்பதை எச்சரிக்கிறது.
கடற்கரை நகரமான சென்னை போன்ற நகரத்திற்கான காலநிலை செயல்திட்டமானது, உள்ளூர் அளவில் செயல்படுத்தப்படும் அறிவியல் அடிப்படை கொண்ட நடவடிக்கைகளை பிரதிபலிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை காலநிலை செயல் திட்டமானது, சென்னையை காலநிலை மீள்தன்மை கொண்ட செயலூக்கம் உள்ள நகரமாக மாற்றுவற்கான முக்கியமான முதல் படியாகும்.
தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழலைப் பாதுகாக்க தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்தினை செயல்படுத்துவதன் மூலம் மாசினை குறைத்து, காலநிலை சவால்களை எதிர்கொள்ளவும், மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்தவும் மற்றும் பசுமை வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உதவியாக இருக்கும்.
காலநிலை மாற்ற நிகழ்வுகளை காணும்போது, மனித செயல்பாட்டிற்கும், காலநிலை மாற்றத்திற்கும் உள்ள தொடர்பு முன்னிலைப்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், தமிழ்நாடு ஈர நிலங்கள் இயக்கம், தமிழ்நாடு பசுமை இயக்கம் ஆகியவற்றால், நமது மாநிலம் காலநிலை மாற்றத்தை நோக்கிய நீண்ட பயணத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறது.
சென்னை காலநிலை செயல் திட்டமானது, தமிழ்நாடு மாநில காலநிலை மாற்றம் குறித்த செயல் திட்டத்துடன் ஒன்றி காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரிடர்களான புயல், வெள்ளம் மற்றும் கடல் மட்ட உயர்வு போன்றவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உதவியாக இருக்கும். அரசின் ஈடுபாடும் மற்றும் தலைமைப் பண்பும் ஒரு லட்சியமிக்க காலநிலை செயல் திட்டத்தை உருவாக்கிட முடியும் என்பதற்கு சென்னை முன்னுதராணமாக விளங்குகிறது.
இது குறிப்பாக உலகின் தெற்கு பகுதியில் அதிக காலநிலை அபாயம் உள்ள நகரங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மேலும், சென்னை காலநிலை செயல் திட்டமானது, C40 நகரங்கள் ஆதரவுடன், அகமதாபாத்தில் உள்ள நகர்ப்புற மேலாண்மை மையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது.
இச்செயல் திட்டமானது, கார்பன் உமிழ்வை குறைக்கும் நோக்கமான 2018 - 2019 உமிழ்வு அளவுகளுடன் ஒப்பிடுகையில், 2030ஆம் ஆண்டில் 1 சதவீதம் அதிகரிப்பு, 2040ஆம் ஆண்டில் 40 சதவீதம் குறைதல் மற்றும் 2050ஆம் ஆண்டில் நிகர பூஜ்ஜியத்தை அடைவற்கான பாரிஸ் காலநிலை ஒப்பந்தங்களுடன் ஒத்துப்போகிறது. இத்திட்டம் 6 முன்னுரிமை பகுதிகளில் நடவடிக்கை மேற்கொள்ள கவனம் செலுத்துகிறது.