தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலங்கைக்கு உதவ தனித் தீர்மானம்.. பதிலளிக்காத ஒன்றிய அரசு.. முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு..!

தமிழ்நாட்டு சட்டப்பேரவையில், இலங்கை அரசுக்கு உதவ தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து, இது குறித்து ஒன்றிய அரசிடமிருந்து தெளிவான பதில் பெறப்படவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.

special resolution to help sri lanka  mk stalin special resolution to help sri lanka  tamil nadu assembly  இலங்கைக்கு உதவ தனி தீர்மானம்  தமிழ்நாடு சட்டப்பேரவை  இலங்கைக்கு உதவ தனி தீர்மானம் நிறைவேற்றிய ஸ்டாலின்
இலங்கைக்கு உதவ தனி தீர்மானம்

By

Published : Apr 29, 2022, 5:38 PM IST

சென்னை: இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் உதவிகளை மேற்கொள்ள, தமிழ்நாடு சட்டப்பேரவையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.

அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, “கடல் சூழ்ந்த இலங்கை நாடு, இன்று கண்ணீரால் சூழப்பட்டுள்ளது. ஈழத்தமிழ் மக்களுக்காகத் திராவிட முன்னேற்றக் கழக அரசு ஆளுங்கட்சியாக இருந்தபோதும், எதிர்க்கட்சியாக இருந்தபோதும் ஆற்றிய பணிகளை இந்த மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள்.

‘தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்’ என்பதைப் போல, நம்முடைய இரத்தத்தில், உணர்வில், வாழ்வில் கலந்த ஒரு பிரச்னையாக இலங்கைப் பிரச்னை இருந்து வருகிறது. இலங்கையில் வாழக்கூடிய ஈழத் தமிழர் நலன் கருதி அரசியல் ரீதியாகப் பல்வேறு முழக்கங்களை வெவ்வேறு காலகட்டங்களில் நாம் முன்வைத்திருக்கிறோம்.

காலச்சக்கரம் இலங்கை மக்களை அலைக்கழித்து எங்கோ கொண்டு போய் நிறுத்திவிட்டது. இருப்பினும், இன்றைய நாள் மனிதாபிமான அடிப்படையில் நாம் கைகொடுக்க வேண்டும் என்பதே இந்த அரசினுடைய நிலைப்பாடு ஆகும். தற்போது இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கான காரண, காரியத்திற்குள் நான் செல்ல விரும்பவில்லை.

இலங்கைத்தமிழர் தலைவர்களும், சில தமிழ் அமைப்புகளும் எனக்கு வைத்த கோரிக்கை, “தனியாகத் தமிழர்களுக்கு மட்டும் உதவி என்று அனுப்ப வேண்டாம்; இலங்கை மக்களுக்கு என்று பொதுவாக அனுப்புங்கள்; மக்களைப் பிரித்துப் பார்க்க வேண்டாம்; அனைத்து இன மக்களும் சேர்ந்துதான் இந்த நெருக்கடியை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்'' என்று சொன்னார்கள்.

அதைக் கேட்டபோது நான் நெகிழ்ந்து போனேன். என்னால் உணர்ச்சிப் பெருக்கைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதுதான் தமிழர் பண்பாடு. "பகைவர்க்கும் அருள்வாய் நன்நெஞ்சே" என்பதைப் போல, இலங்கைத் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பதற்கு இது எடுத்துக்காட்டு.

இந்நிலையில், ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்காக நாம் உதவிகள் செய்தாக வேண்டும். அந்த வகையில் பின்வரும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கலாம் எனத் தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது.

முக்கியமாக, 80 கோடி ரூபாய் மதிப்பில், 40 ஆயிரம் டன் அரிசியும்; 28 கோடி ரூபாய் மதிப்பில், உயிர் காக்கக்கூடிய 137 மருந்துப் பொருட்களும்; 15 கோடி ரூபாய் மதிப்பில், குழந்தைகளுக்கு வழங்க 500 டன் பால்பவுடரும்; இலங்கையில் வாழக்கூடிய அனைத்து மக்களுக்கும் நாம் வழங்க நினைக்கிறோம். இவற்றை மாநில அரசு நேரடியாக வழங்க முடியாது. ஒன்றிய அரசின் அனுமதியோடு இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் வழியாகத்தான் வழங்க வேண்டும்.

இலங்கையில் இத்தகைய நெருக்கடி ஏற்பட்டதுமே, இந்திய அரசிடம் இதுகுறித்த கோரிக்கையை டெல்லியில் நேரில் சென்று பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டும் கோரிக்கை வைத்திருக்கிறேன். இன்றுவரை எந்தத் தகவலும் இல்லை. ஆனால் அங்கு நிலைமை தற்போது மிகவும் மோசமடைந்துள்ளது.

'உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு' என்கிறார் வள்ளுவர். உதவி என்பதும் மனிதாபிமான அடிப்படையில் உடனடி உதவியாக இருக்க வேண்டும். காலத்தே செய்தால்தான் அது உதவி. இதனைத்தான் தமிழ்நாடு மக்களும் எதிர்பார்க்கிறார்கள். இந்த எண்ணத்தை ஒன்றிய அரசுக்குச் சொல்லக்கூடிய வகையில் ஒரு தீர்மானத்தை இந்த மாமன்றத்தில் நிறைவேற்றி அனுப்புவது காலத்தினுடைய கட்டளை என்று அரசு கருதுகிறது. அதனடிப்படையில், பின்வரும் தீர்மானத்தை நான் இங்கே முன்மொழியக் கடமைப்பட்டிருக்கிறேன்.

தீர்மானம்“இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிடும் பொருட்டு, தமிழ்நாடு அரசு அவர்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, பால் பொருட்கள் முதலிய அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கக்கூடிய மருந்துகள் ஆகியவற்றை அனுப்பி வைக்கத் தயாராக உள்ளது என்றும்; இதற்கு ஒன்றிய அரசு தேவையான அனுமதி வழங்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசிற்கு ஏற்கெனவே மாநில அரசு கடிதம் எழுதியிருக்கிறது. எனினும், இதுகுறித்து ஒன்றிய அரசிடமிருந்து எந்தவிதமான தெளிவான பதிலும் இதுவரை பெறப்படாத நிலை உள்ளது.

தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கையில் கடும் இன்னலுக்கு உள்ளாகி இருக்கக்கூடிய மக்களுக்கு உதவக்கூடிய வகையில், உணவு மற்றும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை உடனடியாக அனுப்பி வைக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து, உரிய அனுமதிகளை வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசினை இப்பேரவை வலியுறுத்துகிறது.”

இந்தத் தீர்மானத்தை கட்சி எல்லைகளைக் கடந்து, கருணை உள்ளத்தோடு அனைவரும் ஒருமனதாக ஆதரிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். இதனையடுத்து பேரவையில் ஒருமனதாக இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையும் படிங்க: துயரத்தில் இருக்கும் இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக 50 லட்சம் அளித்த ஓபிஎஸ் - நன்றி சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின்...

ABOUT THE AUTHOR

...view details