சென்னை:நாளை (ஜன.15) பொங்கல் பண்டிகை நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்படவுள்ள நிலையில், தமிழக மக்களுக்கு வீடியோ மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், களம் காண்பான் வீரன் என்றால், நெற் களம் காண்பான் உழவன் மகன் எனவும், போர் மீது செல்லுதலே வீரன் வேலை என்றால், வைக்கோற் போர் மீது உறங்குதலே உழவன் வேலை என்றும், பகைவர் முடி பறித்தல் வீரன் நோக்கம் நாற்று முடி பறித்தலே உழவன் நோக்கம்,
உழவனுக்கும், வீரனுக்கும் ஒற்றுமைகள் பல உண்டு வேற்றுமையோ ஒன்றே ஒன்று உழவன் வாழ வைப்பான், வீரன் சாக வைப்பான் என மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி எழுதிய வரிகளைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர் என திருக்குறளையும் மேற்கோள்காட்டி, கடந்த 3 ஆண்டுகளாக கூடுதல் மகிழ்ச்சிக்குரியதாக தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தனிப்பெரும் ஆட்சி நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.