சென்னை:கலைவாணர் அரங்கத்தில் நேற்று (மே 18) தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் 25வது பொதுக்குழுக் கூட்டம் மற்றும் பொன்விழா மாநாடு நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “ராணுவ வீரர்களுக்கும், காவல் துறையினருக்கும் சீருடை இருப்பதைப் போல, கட்சியில் கருப்பும், சிவப்பும் கலந்திருக்கக் கூடிய சட்டை, பேண்ட் சீருடையாக அணிந்து இங்கு வந்து கலந்து கொண்டிருக்கக் கூடிய தொழிலாளர் தோழர்களை நான் பார்க்கிறேன். கம்பீரமாக காட்சி அளித்துக் கொண்டிருக்கக் கூடிய இந்த காட்சியைப் பார்க்கிறேன்.
இப்படிப்பட்ட ஒரு காட்சியைப் பார்க்கிறபோது, அத்தனை பேருக்கும் எழுச்சியும், உணர்ச்சியும் நிச்சயமாக ஏற்படும். அதுவும் எங்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது என்பதை இந்த நேரத்தில் நான் பதிவு செய்ய விரும்புகிறேன். 2012 மற்றும் 2017ஆம் ஆகிய ஆண்டுகளில் ஜெனீவாவில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் நம்முடைய சண்முகம் கலந்து கொண்டு, சிறப்பாக தொழிற்சங்கத்தினுடைய உரிமைகளை எடுத்துச் சொன்னார்.
தொ.மு.ச. பேரவையின் நடவடிக்கையால் இந்தியாவில் 19 மாநிலங்களில் இணைப்புச் சங்கங்கள் உருவாகி இருக்கின்றன. குறிப்பாக, ஒடிசா மாநிலத்தில் 40 சங்கங்கள் இணைக்கப்பட்டிருக்கிறது. அம்மாநில அரசு சிறந்த தொழிற்சங்கமாக எல்பிஎஃப்-ஐத் தேர்வு செய்து பரிசும் வழங்கி பெருமைப்படுத்தி இருக்கிறது.
போக்குவரத்துக் கழக தொழிற்சங்கப் பணிகளை பாராட்டி, சர்வதேச தொழிலாளர் பேரவையும் நம்முடைய சங்கங்களை இணைத்துக் கொண்டது. 1969ஆம் ஆண்டு தலைவர் கருணாநிதி முதலமைச்சராகப் பொறுப்பேற்ற உடன், அண்ணன் துரைமுருகன் சொன்னது போல, தொழிலாளர் நலனில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக, அன்றைக்கு முதலமைச்சராக பொறுப்பேற்ற கருணாநிதி ‘தொழில் - தொழிலாளர் நலம் - கூட்டுறவு’ என ஒன்றாக இருந்த மூன்று துறைகளிலிருந்து தொழிலாளர் நலனுக்கெனத் தனித் துறையையும், தனி அமைச்சகத்தையும் உருவாக்கினார்.
ரத்தம் சிந்திப் போராடி, உயிர்த் தியாகம் செய்து, தொழிலாளர் சமுதாயம் பெற்றிருக்கக் கூடிய உரிமைகள் குறித்த வரலாற்றை நினைவுபடுத்தும் வகையில்தான், 1969ஆம் ஆண்டில் மே 1 ஊதியத்தோடு கூடிய விடுமுறை, பொது விடுமுறை நாளாக அறிவித்துச் சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்தியது நம்முடைய தலைவர் கருணாநிதியின் உடைய மகத்தான சாதனைகளில் அதுவும் ஒன்று.
அவசரச் சட்டம் பிறப்பித்து, வேளாண் தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி வழங்க வழிவகை செய்தது திமுக அரசுதான். பீடித் தொழில், பனியன் நெசவு, தோல் பதனிடும் தொழில், எண்ணெய் ஆலைகள், செங்கல் சூளை, உப்பளம் முதலியவற்றில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்குத் தொழிற்சங்க பலம் இல்லாததால் போதிய ஊதியம் வழங்கப்படாமல் அல்லல்பட்டு வந்த நிலையைக் கண்டு, தொழில் முகவர்களிடம் பேசி, அவர்களுக்கெல்லாம் குறைந்தபட்ச ஊதியம் கிடைக்கச் செய்ததும் திமுக அரசுதான்.
தொழிலாளர்கள் ஓய்வு பெறும்போது அரசு ஊழியர்களுக்கு உள்ளது போல் ‘பணிக்கொடை’ வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தியதும் திமுக அரசுதான். விபத்துகளால் பாதிக்கப்படும் தொழிலாளர்களின் குடும்பங்களைக் காப்பதற்காக ‘தொழில் - விபத்து நிவாரண நிதித் திட்டத்தை’ உருவாக்கியதும் திராவிட முன்னேற்றக் கழக அரசுதான்.
கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்துடன், விவசாயத் தொழிலாளர் நல வாரியம், மீனவர் நல வாரியம், கிராமக் கோயில் பூசாரிகள் நல வாரியம், தூய்மைப் பணிபுரிவோர் நல வாரியம் உள்ளிட்ட 36 அமைப்புசாரா நலவாரியங்களை உருவாக்கி உதவிகள் செய்தது, திமுக அரசினுடைய மிகப் பெரிய மகத்தான சாதனை.
1990ஆம் ஆண்டு மே நாள் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை நேப்பியர் பூங்காவிற்கு ‘மே தின பூங்கா’ என்று பெயரிட்டு, மே நாள் நினைவுச் சின்னத்தை நிறுவியவரும் நம்முடைய தலைவர் கருணாநிதி தான். அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு வாதாட உருவானதுதான் உடலுழைப்புத் தொழிலாளர் சட்டம் மற்றும் தொழிலாளர் நல வாரிய சட்டம் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது.
திமுக ஆட்சியின்போது உடலுழைப்புத் தொழிலாளர் சட்டத்தில் உள்ள பிரிவின் அடிப்படையில் பல வாரியங்கள் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர்தான் மத்தியிலே அமைப்புசாரா வாரியங்களுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு அரசு ஊழியர்களைப் போல ஓய்வூதியம் வழங்கியது, பஞ்சப்படி உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் வழங்கியது திமுக ஆட்சி.
அதேபோல் மின்சார வாரியத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தி அவர்களுக்கும் அனைத்து சலுகைகளும் பெற்றுத்தந்தது, திமுக அரசு. நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் ஆயிரக்கணக்கான சுமை தூக்கும் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தி அவர்களுக்கும் பணிப் பலன்களை பெற்றுத் தந்தது திமுக அரசு.
சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களுக்கு பணிக்கேற்ற ஊதியம் வழங்கியதும் திமுக அரசுதான். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், அப்பரன்டீஸ் தொழிலாளர்கள், ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் போன்ற பல்வேறு வகை தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் வழங்கியதும் திமுக அரசு.