சென்னை: இந்தியாவின் சிறந்த வேளாண் விஞ்ஞானியும், 'பசுமை புரட்சியின் தந்தை' எனவும் அழைக்கப்படும் எம்.எஸ்.சுவாமிநாதன் சென்னையில் அவரது மகள்களுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், வயது மூப்பு காரணமாக இன்று (செப்.28) காலை எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார். தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “உலகம் போற்றும் விஞ்ஞானியாக சுற்றுச்சூழல், வேளாண்மைத் துறையில் அளப்பரிய பங்காற்றிய சுவாமிநாதன் அவர்களை கௌரவிக்கும் விதமாக, அன்னாருக்கு காவல் துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட பல முக்கிய பிரமுகர்கள் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து, வி.கே.சசிகலா, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அமமுக துணை பொதுச் செயலாளர் ஜி.செந்தமிழன், அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.