தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 16, 2023, 12:44 PM IST

ETV Bharat / state

3 மாநிலங்களில் பாஜக வெற்றி.. முதலமைச்சர் ஸ்டாலினின் கணிப்பு என்ன?

CM MK Stalin on BJP's victory: மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் தங்களுக்கு ஒரு பாடம் என இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலைமைச்சருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை:திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், பிரபல ஆங்கில பத்திரிகைக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், மூன்று மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின்படி, பாஜகவினர் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதைத் தடுக்க முடியாது என்ற நிலையை உருவாக்கியுள்ளதாக நிலவும் சூழலில், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின், “மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் என்பவை சட்டமன்றத் தேர்தல் முடிவுகள். சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மக்களவைத் தேர்தலின் மீது தாக்கத்தை செலுத்தாது. பொதுவாக சட்டமன்றத் தேர்தலின்போது மாநிலப் பிரச்சினைகள் தலைதூக்கிக் காணப்படும். அவைதான் இத்தகைய முடிவுகளுக்கு காரணம்.

ராஜஸ்தான் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றிருந்தாலும், காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 10 லட்சம் வாக்குகள். அதேபோன்று, சத்தீஸ்கரில் பாஜக 6 லட்சம் வாக்குகள் மட்டுமே அதிகமாகப் பெற்றுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் மட்டும் 35 லட்சம் வாக்குகளை கூடுதலாக பாரதிய ஜனதா கட்சி பெற்றுள்ளது” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்த மூன்று மாநிலத் தேர்தலில், பாஜகவினருக்கு எதிரான வாக்குகள் சிதறாமல், ஒருமுகப்பட்டு இருக்குமானால், தேர்தலில் பாஜக வெற்றியை பெற்றிருக்க முடியாது. நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான வாக்குகளை, அனைத்து மாநிலங்களிலும் ஒன்று சேர்க்கும் முயற்சிகளை 'இந்தியா' கூட்டணி செய்யும். அதன் மூலமாக நாடாளுமன்றத் தேர்தலில் முழுமையான வெற்றியைப் பெறுவோம். எனவே, மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகளும் எங்களுக்கு ஒரு பாடம்” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க:இதுவரை 48.6 டன் எண்ணெய் கழிவுகள் அகற்றம்.. எண்ணூர் இடரில் கைகோர்த்த மும்பை நிறுவனம்!

ABOUT THE AUTHOR

...view details