சென்னை:மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவியும், முதலமைச்சர் ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாளின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோபாலபுர இல்லத்திற்கு வருகை தந்து, தனது தாயாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஆசி பெற்றார். அதுமட்டுமல்லாமல் காலை முதலே, திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி, துர்கா ஸ்டாலின் மற்றும் உறவினர்கள் பலர் கோபாலபுரம் இல்லத்தில் தயாளு அம்மாவை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்து ஆசிபெற்றனர்.
முதலமைச்சர் வந்த ஒரு பத்து நிமிடத்திற்குப் பின் மு.க.அழகிரியும் வருகை தந்து, தனது தாயாருக்கு வாழ்த்து தெரிவித்து ஆசி பெற்றுள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் ஒரே நேரத்தில் குடும்ப நிகழ்வுக்கு வருகை தந்து கலந்து கொண்டுள்ளனர்.
மு.க.ஸ்டாலின் முதலமைச்சரான பிறகும் இரண்டு ஆண்டுகளாக பலமுறை இருவரும் சந்திக்க வாய்ப்புகள் அமைந்த சூழலிலும் இவர்களின் சந்திப்பு நடைபெறவில்லை. முதலமைச்சரான பிறகு முதலமைச்சர் இரண்டு முறை மதுரை சென்ற போது, இருவரும் சந்தித்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சந்திப்பு நடைபெறவில்லை. அதனைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளில் இருவரும் சந்தித்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது அன்றும் சந்திப்பு நடைபெறவில்லை.