தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் - பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாட்டில் பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா திட்டத்தினை சிப்காட் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி மற்றும் மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ஆகியோருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் - பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் - பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

By

Published : Mar 18, 2023, 4:58 PM IST

சென்னை:தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இ.குமாரலிங்கபுரத்தில், பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா (பிஎம் மித்ரா) அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்தும், தமிழ்நாட்டில் இந்தத் திட்டத்தினை சிப்காட் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்த வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கும் இன்று (மார்ச் 18) கடிதம் எழுதி உள்ளார்.

இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சருக்கு எழுதி உள்ள கடிதத்தில், “தமிழ்நாட்டில் பிஎம் மித்ரா (PM MITRA) பூங்காவினை அமைத்திட விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இ.குமாரலிங்கபுரம் கிராமத்தினைத் தேர்வு செய்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பூங்காவின் மூலமாக தமிழ்நாட்டின் தென்மாவட்டங்கள் பெரிதும் பயன் அடையும். தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளுக்குத் தேவையான நிலங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடும் முகமையாகச் செயல்படும், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்), இந்த பூங்கா அமைய உள்ள இடத்தில் ஏற்கெனவே 1,052 ஏக்கர் நிலத்தினை தன்வசம் வைத்துள்ளது.

அதனால் அந்த நிறுவனம், இந்தத் திட்டத்தை உடனடியாக அங்கு செயல்படுத்திடத் தயாராக உள்ளது. தமிழ்நாட்டில் சிப்காட் நிறுவனம், பெரிய தொழில் பூங்காக்களை நிறுவி, தனது திறனை நிரூபித்துள்ளது. தற்போது மாநிலத்தில் 2,890 நிறுவனங்கள் 3,94,785 பணியாளர்கள் உடன் 38,522 ஏக்கரில் 28 தொழிற்பேட்டைகளை அந்த நிறுவனம் நிறுவி உள்ளது. தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள், சிப்காட் நிறுவனத்தால் உருவாக்கப்படும் தொழிற் பூங்காக்களில் தொழில் தொடங்கிட விரும்புகிறது.

தமிழ்நாட்டில் தனியாரால் மேம்படுத்தப்பட்டுள்ள தொழிற் பூங்காக்கள் குறைந்த அளவிலேயே வெற்றியைக் கொண்டுள்ளது. பிஎம் மித்ரா பூங்காவினை சிப்காட் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தினால், இந்தத் திட்டத்தின் நோக்கங்களை வெற்றிகரமாக அடைந்திட இயலும் என்று தமிழ்நாடு அரசு உறுதியாக நம்புகிறது. எனவே, இந்தத் திட்டத்தினைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நிலங்களை தன்வசம் வைத்துள்ள சிப்காட் நிறுவனம், ஏற்கனவே பல்வேறு தொழிற் பூங்காக்களை மேம்படுத்தி, செயல்படுத்துவதில் உறுதியான சாதனை நிகழ்த்தி உள்ளது.

ஆகவே, தமிழ்நாட்டில் சிப்காட் நிறுவனத்தின் மூலம் பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா திட்டத்தினைச் செயல்படுத்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். முன்னதாக நேற்று (மார்ச் 17) பிரதமர் மோடி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப்பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் மெகா ஜவுளிப் பூங்கா அமைக்கப்பட உள்ளது” என தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க:பெரம்பலூர் தொழிற்சாலையால் 10,000 பேருக்கு வேலை - அமைச்சர் சொன்ன தகவல்

ABOUT THE AUTHOR

...view details