சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று (டிசம்பர் 19), சென்னையில் தனியார் ஓட்டலில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில், அரசுப் பள்ளிகளை மேம்படுத்திட ‘நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்” திட்டத்தை தொடங்கி, இலச்சினையை வெளியிட்டார். மேலும் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.5 லட்சத்திற்கான காசோலையை, நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன் தலைவர் வேணு சீனிவாசனிடம் கொடுத்தார்.
இந்நிகழ்ச்சியில் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன் தூதர் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பேராசிரியர் அன்பழகன்:இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது, “தமிழ்நாட்டின் கல்வித்துறை அமைச்சராக இருந்து எண்ணற்ற பல சாதனைகளை அந்தத் துறையில் நிகழ்த்தியிருக்கக்கூடியவர் தான் பேராசிரியர் அன்பழகன். அவருடைய நூற்றாண்டை அரசின் சார்பிலே மட்டுமல்ல, தமிழருடைய உள்ளங்களிலும், இல்லங்களிலும் அந்த விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
இந்த ஆண்டு அரசின் சார்பில் பல நிகழ்ச்சிகளை நாம் நடத்தியிருக்கிறோம். அவருடைய நூற்றாண்டு நிறைவையொட்டி, நுங்கம்பாக்கத்தில் இருக்கக்கூடிய பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு பேராசிரியருடைய பெயரைச் சூட்டி மகிழ்ந்திருக்கிறோம். பேராசிரியருடைய பெயரால் ஏற்கனவே 7500 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பேராசிரியர் அன்பழகனார் பள்ளிகள் மேம்பாட்டுத் திட்டத்தையும் செயல்படுத்தத் தொடங்கியிருக்கிறோம். அதன் தொடர்ச்சியாகத்தான் இன்று மற்றுமொரு முன்னோடித் திட்டம் இங்கு தொடங்கப்படுகிறது.
மறக்க முடியா பள்ளி பருவம்:உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத காலம் எது என்று யாரைக் கேட்டாலும், அது என்னுடைய பள்ளிக் காலம்தான் என்று பலரும் சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம். பள்ளிப் பருவத்தில் துள்ளித் திரிந்த அந்தக் காலத்தைத்தான் யாராலும் மறக்க முடியாது. அதேபோல் உங்களுக்கு நெருக்கமான நண்பர் யார் என்று கேட்டால், பெரும்பாலும் பள்ளிக்காலத் தோழர்களைத்தான் நாம் சொல்வதுண்டு.
நேற்றுப் பார்த்தவரைக் கூட மறந்துவிடுவோம். ஆனால் நாம் குழந்தைகளாக இருந்தபோது, கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் பெயரை நிச்சயமாக நாம் மறக்க மாட்டோம். அவர்கள் முகங்கள் நமக்கு அடிக்கடி வந்து நிழலாடும். அந்தளவுக்கு ஒவ்வொருவருடைய வாழ்விலும் வசந்தகாலம் என்பது பள்ளிக் காலம்தான்.
நாம் இந்தளவிற்கு உயர்வதற்கு, இந்த உயரத்தை அடைவதற்கு உதவியாக இருந்தது அந்தப் பள்ளிக் கூடம் தான். அந்தப் பள்ளிக் கூடங்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டாமா? என்ற உன்னதமான நோக்கத்தோடு ‘நம்ம ஸ்கூல் ஃபவுண்டேசன்’ நம்ம ஊர் பள்ளி என்ற பெயரில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டிருக்கிறது.எல்லாவற்றையுமே அரசாங்கம் செய்து விட முடியாது. மக்களும் கைகோர்க்க வேண்டும். பயன்பெற்றவர்கள் தங்களது நன்றியின் அடையாளத்தைத் தெரிவிக்கலாம். அதற்கான வாசற்படிதான் இந்த நம்ம ஊர் பள்ளி திட்டம்.
கல்வியின் வளர்ச்சி:இன்றைக்கு பள்ளிக் கல்வித் துறையின் பணி மிக முக்கியமானதாக இருக்கிறது. தரமான கல்வி வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு இன்றைக்கு இரண்டாவது இடத்தில் இருந்து கொண்டிருக்கிறது. முதலிடத்திற்கு முந்துவதற்கான அனைத்துப் பணிகளையும் பள்ளிக் கல்வித் துறை இன்றைக்கு சிறப்பாக செய்து கொண்டிருக்கிகிறது.
அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படை இலக்கை மையமாகக் கொண்டு நம்முடைய அரசு செயல்பட்டு வருகிறது. இல்லம் தேடிக் கல்வித் திட்டம் முழு வெற்றியை நமக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. செயலி மூலமாக பள்ளி செல்லாத பிள்ளைகளை பள்ளிக் கூடங்களுக்குள் மீண்டும் அழைத்துக் கொண்டு வரக்கூடிய ஒரு சூழலை ஏற்படுத்தியிருக்கிறோம். எண்ணும் எழுத்தும் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. மாதிரி பள்ளிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
9 முதல் 12 வரையிலான மாணவர்களுக்கு 'நான் முதல்வன்' திட்டத்தின் படி பயிற்சி அளிக்க இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சையும், தேவையான பொருள்களும் கல்வியோடு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. 'நம் பள்ளி - நம் பெருமை' என்ற திட்டத்தை நான் இங்கே தொடங்கி வைத்திருக்கிறேன்.