தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய கடல்நீரை குடிநீராக்கும் நிலையம்.. அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்! - Sea water desalination

Sea water desalination station: செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை பேரூரில் ரூ.4,276.44 கோடி மதிப்பீட்டில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய கடல்நீரை குடிநீராக்கும் நிலையம்.. அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!
தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய கடல்நீரை குடிநீராக்கும் நிலையம்.. அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!

By

Published : Aug 21, 2023, 1:51 PM IST

சென்னை: சென்னை மாநகரின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்களை வடிவமைத்து, நிறுவி, இயக்கி மற்றும் திருப்பித் தரும் அடிப்படையில் மீஞ்சூரில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு, அன்றைய ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால், கடந்த 2007, பிப்ரவரி 25 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த நிலையத்தின் கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் முடிக்கப் பெற்று, அன்றைய முதலமைச்சர் கருணாநிதி 2010 ஜூலை 31 அன்று திறந்து வைத்தார். இந்த நிலையத்திலிருந்து கிடைக்கக் கூடிய குடிநீர் மூலம் வடசென்னை பகுதிகளான மணலி, மாதவரம், எண்ணூர், கத்திவாக்கம், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, வியாசர்பாடி பகுதிகளில் வசிக்கும் சுமார் 10 லட்சம் மக்கள் பயன் பெற்று வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து நெம்மேலியில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைப்பதற்கான திட்டப் பணிகளை அன்றைய துணை முதலமைச்சரான ஸ்டாலின், 2010, பிப்ரவரி 23 அன்று அடிக்கல் நாட்டி, தற்போது சீரான முறையில் இயங்கி வரும் இந்நிலையத்தின் மூலம் தென்சென்னை பகுதிகளாகிய சோழிங்கநல்லூர், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், காரப்பாக்கம், செம்மஞ்சேரி, துரைப்பாக்கம், பெருங்குடி, கொட்டிவாக்கம், பாலவாக்கம், திருவான்மியூர், வேளச்சேரி, தரமணி, பள்ளிப்பட்டு, அடையாறு, பெசன்ட் நகர், நந்தனம், எம்.ஆர்.சி.நகர், ராஜா அண்ணாமலைபுரம், மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் 9 லட்சம் மக்கள் பயன் பெற்று வருகிறார்கள்.

மேலும், நெம்மேலியில் கூடுதலாக நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் இப்பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

இதன் மூலம் உள்ளகரம்-புழுதிவாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், சோழிங்கநல்லூர், ஆலந்தூர், புனித தோமையார் மலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்கட்டளை, மூவரசம்பேட்டை மற்றும் பல்லாவரம் ஆகிய பகுதிகளில் உள்ள 9 லட்சம் மக்கள் பயனடைவார்கள்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் வளர்ச்சியினைத் தொடர்ந்து சென்னைக்கு அருகில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாலும், பெருகி வரும் வளர்ச்சிக்கேற்ப எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு போதுமான அளவில் குடிநீர் வழங்கும் பொருட்டும், பேரூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பேரூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின், இன்று (ஆகஸ்ட் 21) அடிக்கல் நாட்டினார். இந்த நிலையம், தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய நிலையமாக அமைய உள்ளது. இந்நிலையம் அமைக்கும் பணி டிசம்பர் 2026க்குள் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

இந்த நிலையத்தில், கடல்நீரை குடிநீராக்க 1,150 மீட்டர் நீளத்திற்கு கடலுக்குள் HDPE குழாய்கள் பதிக்கப்படும். மேலும், இந்நிலையத்தில் அமைக்கப்பட உள்ள நீர் கரைந்த காற்று அலகுகள் (Dissolved Air Floatation) மற்றும் இரட்டை ஈர்ப்பு மணல் வடிகட்டி அலகுகள் (Dual Media Filter) மற்ற வழக்கமான நிலையங்களை விட நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த அலகுகள் மூலம் கடலில் உள்ள கசடுகள் (மிதப்பவை, துகள்கள்) அகற்றிய பின்னர் கடல்நீரை குடிநீராக்கும் திறனை நிலையாகப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்நிலையத்திலிருந்து போரூர் வரை 59 கிலோ மீட்டர் நீளத்திற்கு குடிநீர் குழாய்கள் பதிக்கப்படும்.

இந்த நிலையத்தின் மூலம், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு அருகில் உள்ள 20 ஊராட்சிப் பகுதிகளில் உள்ள 22.67 லட்சம் மக்கள் பயன் அடைவார்கள்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சென்னையிலுள்ள ஜப்பான் தூதரகத்தின் துணை தூதர் தாகா மசாயுகி (Mr.TAGA Masayuki), இந்தியாவிற்கான ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் தலைமை அலுவலர் சைட்டோ மிட்சுனோரி (Mr.SAITO Mitsunori), வி.எ.டெக் வபாக் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராஜீவ் மிட்டல் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... பதறிப்போன பயணிகள்.. என்ன நடந்தது?

ABOUT THE AUTHOR

...view details