தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.1,250 கோடி மதிப்பீட்டில் 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: இன்று இரவு சென்னை திரும்புகிறார் மு.க ஸ்டாலின்!

சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு இன்று சென்னை திரும்புகிறார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : May 31, 2023, 2:09 PM IST

சென்னை:வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அரசு முறை சுற்றுப்பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு 9 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதன் அடிப்படையில் ரூ.1250 கோடி மதிப்பிட்டில் 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டிருப்பவை பின்வருமாறு;

சிங்கப்பூர் ஜப்பான் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பல்வேறு பன்னாட்டு நிறுவன தலைமை அதிகாரிகளை சந்தித்து வரும் 2024-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார். மேலும், கடந்த 24ஆம் தேதி சிங்கப்பூரில் Temasek, Sembcorp, CapitaLand ஆகிய நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு நிலவும் சாதகமான சூழ்நிலையை எடுத்துக்கூறி முதலமைச்சர், தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்திட வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்தார். அதன் தொடர்ச்சியாக சிங்கப்பூரில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

சிங்கப்பூர் நாட்டில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

1. தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த Singapore Indian Chamber of Commerce and Industries (SICCI) நிறுவனத்திற்கும் இடையே, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு, பல்கலைக்கழக ஒத்துழைப்பு, அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் துறைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு, தமிழ்நாட்டில் தொழில்துறைகளின் ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கு ஆதரவு போன்றவற்றில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

2.சிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அலுவலகம் (Singapore India Partnership Office – SIPO) மற்றும் தமிழ்நாடு அரசின் சிப்காட் நிறுனத்திற்கும் இடையே, பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சியில் ஒத்துழைப்பை ஏற்படுத்துதல் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

3.சிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அலுவலகத்திற்கும் (Singapore India Partnership Office – SIPO), தமிழ்நாட்டின் FameTN மற்றும் TANSIM நிறுவனங்களும் இடையே, தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப தொடர் கல்விக்கான திறன் மேம்பாடு, StartupTN மூலம் ஸ்டார்ட்-அப் பொருளாதார செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கு கூட்டாண்மைகளை எளிதாக்குதல் போன்றவற்றிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

4.தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த Hi-P International Pvt. Ltd., நிறுவனத்திற்கும் இடையே 312 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் மின்னணு பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

5.தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், Singapore University of Technology & Design (SUTD) நிறுவனத்திற்கும் இடையே, தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பில் எதிர்கால மற்றும் தொழில்துறைக்கு தேவையான பாடத்திட்டம் மற்றும் பாட மேம்பாட்டிற்கான அறிவுப் பங்குதாரராக நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

6.தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கும், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த ITE Education Services நிறுவனத்திற்கும் இடையே, தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சி துறையில் நீண்ட கால கூட்டாண்மையை நிறுவுதல், தமிழ்நாட்டில் தொழிற்சாலை திறன் பள்ளிகளை அமைத்தல் மற்றும் மேலாண்மை செய்தல் போன்றவற்றிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து கடந்த 25ஆம் தேதி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஜப்பான் சென்றார்.

அங்கு அவரை ஒசாகாவில் உள்ள ஜப்பான் நாட்டிற்கான இந்திய தூதர் நிகிலேஷ் கிரி வரவேற்றார். அதனை தொடர்ந்து கடந்த 26ஆம் தேதி, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன் (Japan External Trade Organization – JETRO) இணைந்து நடத்தப்பட்ட மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார். அம்மாநாட்டில் சுமார் 80 ஜப்பானிய நிறுவனங்களின் மூத்த மேலாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் (Daicel Safety Systems) நிறுவனத்திற்கும் இடையே, செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் உள்ள டைசல் நிறுவனத்தின் Airbag Inflator தயாரிப்பு தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

ஜப்பான் நாட்டில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

1.தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், கியோகுட்டோ சாட்ராக் (KyoKuto Satrac) நிறுவனத்திற்கும் இடையே, காஞ்சிபுரம் மாவட்டம், மாம்பாக்கத்தில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் 13 ஏக்கர் நிலப்பரப்பில், 113 கோடியே 90 இலட்சம் ரூபாய் முதலீட்டில் டிரக் வாகனங்களுக்கான பாகங்கள் உற்பத்தி செய்வதற்கான புதிய ஆலை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

2.தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், மிட்சுபா (Mitsuba) நிறுவனத்திற்கும் இடையே, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பூங்காவில் அமைந்துள்ள நான்கு மற்றும் இரண்டு சக்கர வாகனங்களுக்கான உதிரி பாகங்களை தயாரிக்கும் மிட்சுபா இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவன தொழிற்சாலையை 155 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவாக்கம் செய்யும் திட்டத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

3.தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், ஷிமிசு (Shimizu Corporation) நிறுவனத்திற்கும் இடையே, கட்டுமானம், கட்டுமான பொறியியல் மற்றும் அதன் தொடர்புடைய வணிகத்தை தமிழ்நாட்டில் மேற்கொள்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

4.தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், கோயீ (Kohyei) நிறுவனத்திற்கும் இடையே, 200 கோடி ரூபாய் முதலீட்டில், பாலிகார்பனேட் தாள் தயாரித்தல், கூரை அமைப்புகள் தயாரித்தல், கட்டுமானத் துறையில் பயன்படுத்த எலக்ட்ரானிக் கூறுகளுக்கான எக்ஸ்ட்ருஷன் லைன்கள் (extrusion lines for electronic components for use in construction industry) ஆகியவற்றை தயாரிப்பதற்கான தொழிற்சாலை நிறுவுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

5. தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சடோ-ஷோஜி மெட்டல் வர்க்ஸ் (Sato-Shoji Metal Works) நிறுவனத்திற்கும் இடையே, 200 கோடி ரூபாய் முதலீட்டில் விண்வெளி, பாதுகாப்பு மற்றும் கட்டுமான உபகரணங்கள் துறையில் பயன்படுத்தப்படும் உயர்தர எஃகு பாகங்கள் உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலையை நிறுவுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

6. தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், டஃப்ல் (Tofle) நிறுவனத்திற்கும் இடையே, 150 கோடி ரூபாய் முதலீட்டில் சோலார், எஃகு ஆலைகள், விண்வெளி மற்றும் குறைக்கடத்தி தொழில்களுக்கான துருப்பிடிக்காத எஃகு சிறப்பு நெகிழ்வான குழல்களை உற்பத்தி (stainless steel specialized flexible hoses) செய்வதற்கான தொழிற்சாலையை நிறுவுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் "உட்பட மொத்தம் 818.90 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

தொடர்ந்து கடந்த 30ஆம் தேதி, அன்று டோக்கியோவில் உள்ள உலகின் அதிநவீன தகவல் தொழில்நுட்ப மற்றும் மின்னணு நிறுவனமான NEC Future Creation Hub-க்கு சென்று பார்வையிட்டு, அங்குள்ள நவீன தொழில்நுட்ப வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

1. தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், ஓம்ரான் ஹேல்த்கேர் நிறுவனத்திற்கும் இடையே, 128 கோடி ரூபாய் முதலீட்டில் தானியங்கி இரத்த அழுத்த மானிட்டர்களுக்கான உற்பத்தி தொழிற்சாலையை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம், உலகின் முன்னணி நிறுவனமான ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஓம்ரான் ஹேல்த்கேர் நிறுவனம் இந்தியாவின் முதல் மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி தொழிற்சாலையை தமிழ்நாட்டில் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து, இன்று சிங்கப்பூர் ஜப்பான் பயணத்தை நிறைவு செய்து டோக்கியோ விமான நிலையத்திலிருந்து, சிங்கப்பூர் வந்து அங்கிருந்து விமான மூலமாக இன்று இரவு சென்னை திரும்புகிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.

இதையும் படிங்க:தென் மாவட்டங்களில் அதிமுகவின் மவுசு குறைகிறதா? - ஈபிஎஸ்சின் திமுக எதிர்ப்பு கை கொடுக்குமா?

ABOUT THE AUTHOR

...view details