சென்னை:டிஎன்பிஎஸ்சி மூலம் அரசுப் பணிக்கு தேர்வான 10,205 பேருக்கு பணி நியமன ஆணைகளை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், சுருக்கெழுத்தர்கள் உள்ளிட்டோருக்கு பணி நியமன ஆணைகளை அவர் வழங்கினார்.
இதன் பின்னர் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது, “அரையணா காசாக இருந்தாலும் அரசாங்க காசு என்று கிராமங்களில் சொல்வார்கள். ஏனென்றால், அரசாங்க வேலைக்கு இருக்கின்ற மவுசு, எந்தக் காலத்திலும் குறையாது. ‘மக்கள் சேவையே, மகேசன் சேவை’ என்று அண்ணா சொன்னார். அப்படிப்பட்ட மகத்தான பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கக்கூடிய உங்கள் எல்லோரையும் இந்த நேரத்தில் நான் மனதார பாராட்டுகிறேன்.
ஒரு கருவியோ அல்லது இயந்திரமோ சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால், அதில் இருக்கின்ற ஒவ்வொரு பாகமும் பழுதில்லாமல் சிறப்பாக செயல்பட வேண்டும். அது போலத்தான், அரசு என்ற மாபெரும் இயந்திரம் சீரிய முறையில் மக்களுக்கு சேவை செய்ய, அரசு ஊழியர்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் முழு ஈடுபாட்டுடன் பங்களிக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்ற போட்டித் தேர்வுகளுக்கு லட்சக்கணக்கான தேர்வர்கள் விண்ணப்பிக்கிறார்கள். அதனால் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதைச் சரி செய்ய, விடைத்தாள்களை மதிப்பீடு செய்கின்ற முறையை எளிதாக்கவும், காலதாமதத்தை தவிர்க்கவும், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் 95 லட்சம் ரூபாய் செலவில், ஆன்-ஸ்கிரீன் எவாலுவேஷன் லேப் (On screen evaluation lab) என்ற உயர் தொழில்நுட்பம் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது.
’நான் முதல்வன் திட்டம்’ மூலம் கடந்த ஆண்டு மட்டும் 13 லட்சம் இளைஞர்களுக்கு இந்த பயிற்சி தரப்பட்டுள்ளது. இது நிர்ணயித்த இலக்கான பத்து லட்சத்தைத் தாண்டி பயிற்சி பெற்றிருக்கிறார்கள். மத்திய அரசால் நடத்தப்படுகின்ற போட்டித் தேர்வுகளிலும், நம்முடைய மாணவர்கள் அதிகமாக தேர்வாக வேண்டும் என்று 5,000 பேருக்கு ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகளை நான் முதல்வன் திட்டம் நடைபெற்று கொண்டு இருக்கிறது.
குடிமைப்பணித் தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற வேண்டும் என்று, முதனிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 1,000 பேருக்கு மாதந்தோறும் 7,500 ரூபாய் ஊக்கத்தொகையும், பயிற்சியும் வழங்குகின்ற புதிய திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. வருகிற அக்டோபர் மாதத்திலிருந்து இது தொடங்கப்படும். இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி, மாநில அரசுப் பணிகள் போலவே, மத்திய அரசுப் பணிகளிலும் நம்முடைய தமிழ்நாட்டு மாணவர்கள் அதிகளவில் தேர்வாக வேண்டும்.
திமுக ஆட்சி அமைந்த கடந்த இரண்டாண்டு காலத்தில் 12 ஆயிரத்து 576 பேருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது 10 ஆயிரத்து 205 நபர்களுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல், நடப்பாண்டில் மேலும் 17 ஆயிரம் பேருக்கு பல்வேறு அரசுப் பணிகள் வழங்கப்பட இருக்கிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில், பல்வேறு அரசுப் பணிகளுக்கு சுமார் 50 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள் என்பதை அறிவிக்க விரும்புகிறேன்.
அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் பணியை, எந்த குறையும் இல்லாமல் நிறைவேற்ற வேண்டும். ஒருவருக்கு அரசு வேலை கிடைத்தால், அது ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் பலன் அளிக்கும். முதலமைச்சராக இருந்து மட்டுமல்ல, தந்தை நிலையில் இருந்தும் வாழ்த்துகிறேன்.
கோரிக்கை மனு கொடுக்க வருவோரை உட்கார வைத்து பேச வேண்டும். அவர்களது பிரச்னையை காது கொடுத்து கேட்க வேண்டும். அதுதான் நம்பிக்கையையும், மனநிறைவையும் தரும். உட்கார வைத்து பேசுவதுதான் சக மனிதரின் சுயமரியாதை என்பதை நினைத்து மதிப்பு கொடுங்கள். என்னுடைய கோரிக்கையை எல்லோரும் கடைபிடிப்பீர்கள் என்று நம்புகிறேன். மக்களின் பிரச்னைகளை அதிகாரிகள் காது கொடுத்து கேட்டாலே பாதி பிரச்னை தீர்ந்த மனநிறைவை பொதுமக்களுக்குத் தரும்.
இந்த விழாவில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மு.பெ.சாமிநாதன், சக்கரபாணி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உட்பட பல அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:ஆதிச்சநல்லூர் ஆன் சைட் மியூசியத்தை ஆர்வமுடன் பார்வையிட்ட பள்ளி மாணவர்கள்!