சென்னை: வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால், மிக்ஜாம் புயல் உருவாகி கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டகளை கனமழையால் புரட்டிப் போட்டது. இதனால் பல நீர்நிலைகள் நிரம்பி, மழை நீர் செல்ல வழியில்லாமல் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்தது.
வீடுகளில் தண்ணீர் புகுந்த காரணத்தால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சூளை கண்ணப்பர் திடலில் உள்ள சமுதாய நலக் கூடத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உணவு, பாய், போர்வை ஆகியவற்றை வழங்கி, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து தரும் என்று உறுதியளித்தார்.
அதன் பின்னர் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கல்யாணபுரத்தில் உள்ள சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்டு, அங்குள்ள மருத்துவர்களிடம் மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரம் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட யானைகவுனியில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்த முதலமைச்சர், வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்து, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று தெரிவித்தார்.