தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

2 முன்னாள் அதிமுக அமைச்சர்களின் கோப்புகளை மேற்கோள் காட்டிய முதலமைச்சர்.. விரைந்து ஒப்புதல் வழங்க வலியுறுத்தல்! - Bill passed

TN CM MK Stalin Meeting with Governor RN Ravi: பல மாதங்களாக நிலுவையில் இருக்கும் பல்வேறு கோப்புகளுக்கு விரைந்து ஒப்புதல் அளித்து, அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டுமென முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநரிடம் நேரில் சென்று வலியுறுத்தி உள்ளார்.

tn-cm-stalin-meet-governor-about-emphasis-on-pending-bill
உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் படி ஆளுநர், முதல்வர் நேரில் சந்திப்பு..

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 30, 2023, 8:29 PM IST

உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் படி ஆளுநர், முதல்வர் நேரில் சந்திப்பு..

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் இன்று (டிச.30) சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்பு தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இந்த ஆலோசனையில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஜனவரி மாதம் கூடவிருக்கிற நிலையில், இந்த கூட்டத்தில் ஆளுநர் உரையும் இடம் பெறவிருக்கிறது. இது தொடர்பாக ஆளுநரிடம் ஒப்புதல் பெறும் பொருட்டு, இன்று (டிச.30) மாலை தமிழக ஆளுநரை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேசினார்.

மேலும், தமிழ்நாடு ஆளுநரிடம் பல மாதங்களாக நிலுவையில் உள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகள் தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை நடத்திட வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்ததன் அடிப்படையில் ஆளுநர், முதலமைச்சருக்கு நேரில் சந்திக்க அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில், ஆளுநரின் அழைப்பினையேற்று, முதலமைச்சர் இன்று ஆளுநர் மாளிகையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டத்துறை அமைச்சர் எஸ்.இரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மற்றும் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஆகியோருடன் ஆளுநரைச் சந்தித்தார்.

இந்த சந்திப்பில் பல மாதங்களாக ஆளுநரிடம் நிலுவையில் இருக்கும் பல்வேறு கோப்புகளுக்கு விரைந்து ஒப்புதல் அளித்து, அரசுக்கு அனுப்பி வைத்திட வேண்டுமென்று முதலமைச்சர், ஆளுநரிடம் வலியுறுத்தியதாகவும், குறிப்பாக தமிழ்நாடு சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைத்த 10 முக்கியமான மசோதாக்களை, அரசியல் சாசனத்தில் எங்கும் குறிப்பிடாத வகையில், தேவையின்றி குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளதைத் திரும்பப் பெற்று, அவற்றிற்கும் விரைந்து ஒப்புதல் அளித்து, அரசுக்கு அனுப்பி வைத்திடவும் ஆளுநரிடம், முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், ஊழல் வழக்குகளில் சம்மந்தப்பட்டுள்ள அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர அனுமதி கோரி அனுப்பப்பட்ட கோப்புகளும் பல மாதங்களாக ஆளுநர் வசம் நிலுவையில் உள்ளன.

அவற்றிற்கும் விரைந்து ஒப்புதல் வழங்க இச்சந்திப்பின்போது வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும், இதில் கே.சி.வீரமணி தொடர்பான கோப்பினை 15 மாதங்களுக்கு மேலாகவும், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்பான கோப்பினை 7 மாதங்களுக்கு மேலாகவும் ஆளுநர் நிலுவையில் உள்ளது சுட்டிக் காட்டப்பட்டுள்ளதாகவும், மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள உறுப்பினர் பதவிகளுக்கு உறுப்பினர்களை நியமனம் செய்வது தொடர்பான கோப்பும் நீண்ட காலமாக ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது குறித்தும் தெரிவிக்கப்பட்டு, அவற்றிற்கு ஒப்புதல் அளித்து திரும்ப அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், ஆளுநரிடம் நிலுவையில் உள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகள் தொடர்பாக கோரிய அனைத்து விவரங்களும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் மற்றும் அலுவலர்களால் ஆளுநருக்கு நேரிலும், எழுத்துப்பூர்வமாகவும் அளிக்கப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துக்களை ஆளுநர் மனதில்கொண்டு, நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கும், கோப்புகளுக்கும் உரிய காலத்தில் ஒப்புதல் வழங்கிட வேண்டுமென்றும், வரும் காலங்களில் இது போன்ற தாமதங்களை ஆளுநர் தவிர்த்திட வேண்டுமென்றும் முதலமைச்சர், ஆளுநரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனையின்போது, அரசின் சார்பாக கருத்துக்களை முதலமைச்சரும், அமைச்சர்களும், தலைமைச் செயலாளரும் விரிவாக எடுத்துக் கூறியுள்ளதாகவும், முதலமைச்சர் ஆளுநருக்கு கடிதம் ஒன்றையும் இந்த சந்திப்பின் வாயிலாக வழங்கினார். இக்கடிதத்தில், அரசியல் சாசனத்தின்படி அமைக்கப்பட்டுள்ள அனைத்து உயர் அமைப்புகளின் மீதும் தனக்கு மிக உயர்ந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர், நிலுவையிலுள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகள் குறித்து தெரிவித்தது, மாநில நிர்வாகம் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி அவற்றிற்கு விரைந்து ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:வெள்ள பாதிப்பு; ரூ.1,000 கோடி நிவாரண தொகுப்பு வழங்க முதலமைச்சர் உத்தரவு.. எந்தெந்த இழப்புக்கு எவ்வளவு தொகை?

ABOUT THE AUTHOR

...view details