சென்னை: புளியந்தோப்பு பின்னி மில் மைதானத்தில் நேற்று (ஜூன் 7) நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கருணாநிதி நூற்றாண்டுத் தொடக்க விழாப் பொதுக்கூட்டத்தில் கட்சித் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “1949ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் நாள் கொட்டும் மழையில் ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டதே, அதே வடசென்னையில் அவரது நூற்றாண்டு விழா தொடங்குகிறது. ஓராண்டு முழுவதும் கருணாநிதியின் பிறந்தநாளை, அவரது நூற்றாண்டு விழாவை நாம் கொண்டாட இருக்கிறோம்.
இந்தக் கொண்டாட்டங்களின் மூலமாக கருணாநிதிக்கு இதுவரை கிடைக்காத புதிய புகழைச் சேர்க்கப் போகிறோம் என்பது இல்லை. ‘நான் சீமான் வீட்டுப் பிள்ளை அல்ல, சாமானியர் வீட்டுப் பிள்ளை’ என்று சொன்னவர் கருணாநிதி. அவரது ஆட்சியே சாமானியர்களுக்கான ஆட்சிதான்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியே ஏழை எளிய, பாட்டாளிகள் பயன்பெறும் ஆட்சியாகத்தான் இருக்கும். திராவிட முன்னேற்றக் கழகம் முதல் முறை ஆட்சிக்கு வந்தபோது ‘முரசொலி’ இதழில் கருணாநிதி ‘ஏழை குலத்தில் உதித்த ஒரு தமிழன் ஏறுகிறான் அரசு கட்டில், இனி ஏழைக்கு வாழ்வு வந்தது’ என்று எழுதினார்.
ஏழைக் குலத்தில் உதித்த ஒரு தமிழன், அண்ணா, கருணாநிதி இவர்களுடைய ஆட்சி ஏழைகள் சிரிக்கும் ஆட்சி. குடிசை மாற்று வாரியம், ஆதிதிராவிடர் வீட்டு வசதி வாரியம், தொழுநோயாளிகள் இல்லம், பிச்சைக்காரர் மறுவாழ்வு மையங்கள், ஏழைகளுக்குக் கண்ணொளி திட்டம், கைம்பெண்கள் மறுவாழ்வுக்கு நிதி, தரிசு நிலங்களை ஏழைகளுக்கு வழங்குதல், வேளாண் தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி வழங்க கணபதியாப்பிள்ளை ஆணையம், நகர்ப்புறத் தொழிலாளர் ஊதியத்தை நிர்ணயம் செய்ய கார்த்திகேயன் ஆணையம் ஆகியவற்றை உருவாக்கினார்.
மேலும், வேளாண் தொழிலாளர்கள் குடியிருந்த மனைகள் அவர்களுக்கே சொந்தமாக்கும் வகையில் குடியிருப்பு மனைச் சட்டம், கை ரிக்ஷாவை ஒழித்து, இலவச சைக்கிள் ரிக்சா வழங்கும் அற்புதமான திட்டம், ஊனமுற்றோர் நல்வாழ்வுத் திட்டம், அவர்களுக்கான தொழிற்சாலைகள் அமைத்தது, மாற்றுத்திறனாளிகள் என்று அழைத்து அந்தச் சொல்லுக்குச் சட்ட அங்கீகாரம் தந்தவர் கருணாநிதி.
இந்தியாவிலேயே முதன்முதலாக உழவர்களுக்கு இலவச மின்சாரம் கொடுத்ததும் கருணாநிதி. ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மகளிருக்கு இலவசக் கல்வி வழங்கினார். ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித் திட்டம் கொண்டு வந்தார். குடும்பத் தலைவரை இழந்து தவிக்கும் மகளிருக்கு உதவித் திட்டம் கொண்டு வந்தார்.
மாணவர்களுக்கு இலவசப் பேருந்து பாஸ் வழங்கியது. அனைவருக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், அமைப்பு சாராத் தொழிலாளர் வாரியம் அமைத்தது, உழவர் சந்தைகள் அமைத்ததும் கருணாநிதிதான். சமத்துவபுரங்கள் உருவாக்கியது என இப்படி நாள் முழுவதும் சொல்லிக் கொண்டே போகலாம்.
அந்தளவுக்கு ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட, ஏழை எளிய மக்களுக்கான ஆட்சியாகத் தமிழ்நாட்டு ஆட்சியை வடிவமைத்துக் கொடுத்தவர்தான் கருணாநிதி. இந்த மேடையில் இருக்கும் அனைத்துத் தோழமை இயக்கங்களுக்குமான வழிகாட்டி. அதனால்தான், அவரது புகழைப் போற்ற அனைத்து தலைவர்களும் இங்கே ஒரு சேர வந்திருக்கிறார்கள்.
தான் ஒரு அரசியல் கட்சியின் தலைவர், ஒரு மாநிலத்தின் தலைவர் என்ற எல்லைகளைக் கடந்து உலகத் தலைவராகச் செயல்பட்டவர் கருணாநிதி. ஒரு கருத்தியலின் தலைவராக கருணாநிதி இருந்தார். கடந்த காலப் பெருமிதங்களோடு நிகழ்காலச் செயல்பாடுகளை இணைத்தவர். நிகழ்காலச் செயல்பாடுகளோடு எதிர்கால இலக்குகளைத் தீர்மானித்தவர் அவர்.
இன்றைக்கு ‘திராவிட மாடல்’ என்ற கோட்பாட்டோடு நாம் ஆட்சி நடத்தி வருகிறோம் என்றால், அந்த திராவிடவியல் நிர்வாகக் கோட்பாட்டுக்கு அடித்தளம் அமைத்தவரும் கருணாநிதிதான். சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம், இன உரிமை, மொழிப்பற்று, மாநில சுயாட்சி ஆகியவைகளை உள்ளடக்கிய உன்னதமான கோட்பாடுதான் திராவிடக் கோட்பாடு.
திராவிடம் என்ற சொல்லைப் பார்த்து இன்றைக்கு சிலர் பயப்படுகிறார்கள். கண்ணை மூடிக்கொண்டு விதண்டாவாதம் செய்து கொண்டு இருக்கிறார்கள். ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்பதே திராவிடத்தின் உள்ளடக்கம். எல்லார்க்கும் எல்லாம் வாய்த்துவிடக் கூடாது என்று நினைப்பவர்கள்தான் திராவிட மாடலை எதிர்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
படிப்பு மறுக்கப்பட்ட சமூகத்துக்கு படிப்பைக் கொடு. கல்லூரிக் கல்வியை அடைய முடியாதவர்க்கு கல்லூரிக் கல்வியைக் கொடு. ஏழை, எளிய விளம்பு நிலை மக்களின் சமூகப் பங்களிப்பை அதிகப்படுத்து. வர்ணம், சனாதனத்தின் பேரால் ஒதுக்கப்படுபவர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளைப் பெற்றுத் தா, ஆணுக்கு நிகர் பெண்.
பெண்களுக்குப் பொருளாதார விடுதலையை வழங்கு. பெருந்தொழில்களை மட்டுமல்ல, சிறுதொழில்களையும் வளர்த்தெடு. நகர்ப்புறப் பகுதிகளோடு கிராமப்புறங்களும் செழிக்க வேண்டும். அனைத்துத் தொழில்களும் சிறக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களும் வளம் பெற வேண்டும். மாநிலத்தின் வளம் என்பது, மாநில மக்களின் சிந்தனை வளர்ச்சியில் தெரிய வேண்டும். இதுதான் திராவிட மாடல் வளர்ச்சி” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்த வளர்ச்சிகள்தான் தமிழ்நாடு என்ற மாநிலத்தை இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாக வளர்க்கப் போகிறது. நாளையே இது நடந்து விடும் என்று சொல்லும் கற்பனைவாதி அல்ல நான். ஆனால், திராவிட மாடலே அதனைச் செய்து காட்டும் என்ற நம்பிக்கை கொண்டவன் நான்.