சென்னை: இஸ்ரேல் நாட்டிற்கும், பாலஸ்தீன நாட்டிற்கும் இடையேயான விவகாரம் நூற்றாண்டை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இருப்பினும் அதற்கான தீர்வு இன்று வரையிலும் கண்டறியப்படவில்லை என்பது தான் சோகம். பாலஸ்தீன நாட்டின் அரசியல் அமைப்பாக உருவாகிய ஹமாஸ் அமைப்பு, பின் ஆயுதப்படையாக மாறி பல தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது.
அப்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு, இஸ்ரேல் நாட்டு மக்கள் மீது தாக்குதல் நடத்தி, சிலரை பிணைக்கைதிகளாக சிறைப் பிடித்து சென்றது. இது மீண்டும் போர் சூழல் ஏற்படும் அச்சத்தை ஏற்படுத்தியது. அதேபோல் ஹமாஸ் ஆய்த படையும், இஸ்ரேல் ராணுவமும் ஏவுகணைகள் மூலம் தாக்கிக் கொண்டனர். இதில் இரு நாட்டைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சுமார் 10 நாட்களை கடந்து நிகழும் இந்த தாக்குதல்களில், காசா பகுதியை சார்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டு இருந்தது. அப்பகுதியில் மின்சாரம், தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் மக்கள் பெரும் அவதி அடைந்தும், உயிர் பயத்திலும் வாழ்ந்து வந்தனர். காசா பகுதிகளில் மருத்துவமனைகள் அனைத்தும் படுகாயம் அடைந்தவர்களும், மரணமடைந்தவர்களின் உடல்களாக நிரம்பி காணப்பட்டன.
இந்நிலையில் நேற்று இரவு காசா நகரப் பகுதியில் உள்ள அல்-அஹ்லி (Al Ahli) மருத்துவமனையில் வான்வழித் தாக்குதல் நிகழ்ந்தது. இந்த தாக்குதல் இஸ்ரேல் ராணுவம் நிகழ்த்தியதாகவும், அத்தாக்குதலால் 500க்கும் மேற்பட்டவர்கள் மரண்மடைந்தாகவும் பாலஸ்தீன நாட்டின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அறிவித்தார். அதனை ஏற்க மறுத்த இஸ்ரேல் அரசு, அத்தாக்குதல் இஸ்லாமிய ஆயுத படையினரின் ஏவுகணையால் ஏற்பட்டது என அறிவித்தது.