சென்னை: மிக்ஜாம் புயலின்போது பெய்த கனமழையில், எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் சென்னை பெட்ரோ கெமிக்கல் நிறுவன வளாகத்திலிருந்து வெள்ள நீரோடு கலந்து வந்த எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, 8 கோடியே 68 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கொசஸ்தலை ஆற்றின் எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதியன்று ஏற்பட்ட எண்ணெய் கசிவினை அகற்றிட, தமிழக அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்நிகழ்வில் காட்டுக்குப்பம், சிவன்படைகுப்பம், எண்ணூர் குப்பம், முகத்துவாரக்குப்பம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், வ.உ.சி நகர், உலகநாதபுரம் மற்றும் சத்தியவாணி முத்து நகர் ஆகிய கடலோர மீனவ கிராமங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளில் எண்ணெய் படிந்து சேதம் ஏற்பட்டது.
மேலும், இக்கிராமங்களைச் சார்ந்த மீனவர்கள் எண்ணெய் கசிவினால் மீன்பிடித் தொழிலுக்குச் செல்ல இயலாததால், அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது. இதைக் கருத்தில் கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி, அத்தொகையும் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.