சென்னை: கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வந்தால்தான் நீட் மரணங்களுக்கு முடிவு கிடைக்கும் என சுதந்திர தினவிழா உரையில் பேசி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுதந்திர தின விழாவில் நீட் பிரச்சனை எதிரொலிது இருக்கும் நிலையில் சமீப கால நிகழ்வுகள் இதற்கு காரணமாக அமைந்து இருக்கின்றன.
நீட் தேர்வு குறித்த ஆளுநரின் பதில்: கடந்த 12ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற மாணவர்களுடனான கலந்துரையாடலின் போது, மாணவரின் தந்தை ஒருவர் நீட் தேர்வுக்கு எப்போது விலக்கு வழங்குவீர்கள் எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்குப் பதிலளித்த ஆளுநர் ஆர்.என் ரவி, நீட் மசோதாவிற்கு விலக்கு அளிக்கும் அதிகாரம் எனக்கு இருந்தாலும், நான் கையெழுத்திட மாட்டேன் என திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும் நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது மாணவர்களின் போட்டிப் போடும் திறனைக் கேள்விக்குறியாக்கும்" எனவும் ஆளுநர் ரவி விளக்கம் அளித்திருந்தார்.
மு.க ஸ்டாலின் அறிக்கை: இது குறித்து அறிக்கை வெளியிட்ட மு.க ஸ்டாலின், நீட் தேர்வு விலக்கு மசோதாவைப் பொறுத்த வரை ஆளுநர் ஆ.என் ரவிக்கு எந்த அதிகாரமும் இல்லை எனவும், ஏதோ அந்த அதிகாரம் தனக்கு இருப்பதைப் போல நினைத்துக் கொண்டு அவர் காற்றில் கம்பு சுற்றிக் கொண்டு இருக்கிறார் எனவும் விமர்சித்திருந்தார்.
மேலும், இன்னும் சில மாதங்களில் நாங்கள் ஏற்படுத்த நினைக்கும் அரசியல் மாற்றம் நடக்கும் போது நீட் தடுப்புச் சுவர் உதிர்ந்து விழும். "கையெழுத்துப் போடமாட்டேன்" என வீண் வாதம் செய்பவர்கள் எல்லாம் காணாமல் போய்விடுவார்கள் எனவும் ஸ்டாலின் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே கடந்த சனிக்கிழமை குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவரான ஜெகதீஷ்வரன் நீட் தேர்வில் இருமுறை தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டார். அவரின் தந்தையும் ஒரு நாள் இடைவெளியில் தற்கொலையால் உயிரை மாய்க்கவே தமிழ்நாடு முழுவதும் பெரும் பேசு பொருளானது நீட் பிரச்சனை.