சென்னை:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், எஸ்.பி.க்கள் உடனான 2 நாள் ஆலோசனை மாநாடு நேற்று (அக்.04) நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது, “கரோனா பெருந்தொற்று, கனமழை போன்ற இயற்கைச் சீற்றங்களிலிருந்து மீண்டு, அதற்கு பிறகு நமக்கு கிடைத்த ஒன்றரை ஆண்டு காலத்தில் சிறப்பான திட்டமிடல், செயலாக்கம் மற்றும் நிதி மேலாண்மையின் மூலமாக இன்றைக்கு மாநிலத்தின் பொருளாதாரத்தை சரியான வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்று கொண்டிருக்கிறோம்.
மேலும், எந்தவொரு திட்டத்தையும் முதலமைச்சரின் திட்டமாக, ஒரு கட்சி சார்ந்த திட்டமாக கருதாமல், அலுவலர்கள் அனைவரும் தங்கள் கனவுத் திட்டமாக, மக்களுக்கான திட்டமாக நினைத்து அதை முழு ஈடுபாட்டோடு நிறைவேற்றினால்தான், அது மக்களுக்கு நன்மை பயக்கும்.
மாவட்ட ஆட்சியர்களின் மிக முக்கியமான பங்களிப்பு என்பது, அவர் எவ்வாறு பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து, நிர்வாகத்தை கொண்டு செல்கிறார் என்பதில்தான் உள்ளது. நீங்கள்தான் மாவட்ட நிர்வாகத்தின் தலைவர். உங்களால்தான் மாவட்டத்தில் இயங்கும் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைக்க இயலும்” என்றார்.
அதனைத் தொடர்ந்து, ஆலோசனைக் கூட்டத்தில் சில முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார். “முதலாவதாக, அரசுப் பள்ளி மாணவர் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் உணவுக்காக வழங்கப்பட்டு வரும் தொகை ரூபாய் ஆயிரத்திலிருந்து, ரூபாய் ஆயிரத்து 400 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
அதேபோன்று, அரசுக் கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகளில் தங்கி பயிலுவோருக்கு ரூபாய் ஆயிரத்து 100 என்பது, இனி ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம் 1,71,844 மாணவ, மாணவியர் பயன் பெறுவார்கள். இதனால் அரசுக்கு 68 கோடியே 77 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். இதனை கல்விக்காக செய்யும் ஒரு முதலீடு என்று கருதியே, இந்த அரசு இதனை மேற்கொள்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.