தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சில நாடுகளிலிருந்து வெளியேறும் நிறுவனங்களை ஈர்க்க சிறப்புக் குழு அமைப்பு! - CM Press Realse

சென்னை: கரோனா நோய்த்தொற்று தாக்கத்திற்குப் பின் குறிப்பிட்ட சில நாடுகளிலிருந்து வெளியேறும் தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டிற்கு ஈர்க்க தலைமைச் செயலர் தலைமையில் சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது எனத் தமிழ்நாடு அரசு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது.

Cm announcement  முதலமைச்சர் செய்தி குறிப்பு வெளியீடு  முதலமைச்சர் அறிவிப்பு  முதலமைச்சர் தற்போதைய அறிவிப்பு  CM Press Realse]  CM Latest Announcement
CM Latest Announcement

By

Published : Apr 30, 2020, 4:21 PM IST

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டில் வேளாண்மை, தொழில் உற்பத்தி உள்ளிட்ட பொருளாதாரச் செயல்பாடுகளை கரோனா நோய்த்தொற்று பேரிடர் காலத்திற்குப் பின்பு மீண்டும் முன்பு போலவே துடிப்புடன் இயங்கவைப்பதில் அரசு உறுதியுடன் உள்ளது.

உலகப் பொருளாதாரத்தில் கரோனா நோய்ப்பரவல் ஏற்படுத்தியுள்ள பெரும் தாக்கத்தால் பல வெளிநாட்த் தொழில் நிறுவனங்கள் தமது உற்பத்திச் செயல்பாடுகளைப் பரவலாக்கும் பொருட்டு, குறிப்பிட்ட சில நாடுகளிலிருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இடம்பெயர முடிவு செய்துள்ளன.

குறிப்பாக, தமிழ்நாட்டில் அதிக முதலீடு செய்துள்ள நாடுகளான ஜப்பான், தென் கொரியா, தைவான், சிங்கப்பூர், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சார்ந்த தொழில் நிறுவனங்கள் தமது தொழிற்சாலைகளை இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இடமாற்றம் செய்திட முடிவு செய்துள்ளதாகத் தெரியவருகிறது.

இச்சூழலில், தமிழ்நாட்டில் ஏற்கனவே அதிக முதலீடுகளைச் செய்துள்ள நாடுகளைச் சார்ந்த தொழில் நிறுவனங்களின் மீது சிறப்பு கவனம் செலுத்தி, அவர்கள் பிற நாடுகளிலிருந்து இடமாற்றம் செய்யும் தொழிற்சாலைகளை இங்கு ஈர்த்து, நம் இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் பணிகளை முடுக்கிவிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

செய்திக் குறிப்பு

அதன்படி, இவ்வாறு இடம்பெயரும் தொழில் நிறுவனங்களைத் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஈர்ப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தலைமைச் செயலர் தலைமையில் “முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறப்புக்குழு” ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் ஜப்பான், தென்கொரியா, தைவான், சிங்கப்பூர், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சார்ந்த தொழில் கூட்டமைப்புகள், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், தமிழ்நாட்டில் உள்ள ஜப்பானிய தொழில் பூங்காக்களின் பிரதிநிதிகள், தமிழ்நாடு அரசின் நிதி, பெருந்தொழில், குறு, சிறு, நடுத்தரத் தொழில் ஆகிய துறைகளின் செயலாளர்கள், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர், வணிகவரித் துறை ஆணையர் ஆகியோர் இடம்பெறுவர்.

இடம்பெயர வாய்ப்புள்ள நிறுவனங்களைக் கண்டறிதல், அவர்களைத் தமிழ்நாட்டிற்கு ஈர்ப்பதற்கு வழங்கவேண்டிய விரைவான ஒற்றைச்சாளர அனுமதிக்கான வழிமுறைகள், சிறப்புச் சலுகைகள், அவர்களை ஈர்க்க வாய்ப்புள்ள தொழிற்பூங்காக்கள், உள்கட்டமைப்புப் பணிகளைக் கண்டறிந்து விரைந்து செயல்படுத்தும் வழிமுறைகள் உள்ளிட்ட பணிகளை இந்தச் சிறப்புக்குழு மேற்கொள்ளும். இந்தச் சிறப்புக்குழு தனது முதற்கட்ட அறிக்கையை ஒரு மாதத்திற்குள் முதலமைச்சரிடம் வழங்கும்.

செய்திக் குறிப்பு

தமிழ்நாட்டை சீரிய முன்னேற்றப் பாதையில் தளர்வின்றி தொடர்ந்து கொண்டுச்செல்ல அரசு முனைப்புடன் உள்ளது. தொழில் வளர்ச்சியிலும், தொடர்ந்து தொழில் முதலீடுகளை ஈர்ப்பதிலும் தமிழ்நாட்டை ஒரு முன்னணி மாநிலமாகத் தொடர்ந்து நிலைநிறுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுக்கும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பொறியியல் படிப்பில் சேர ஆன்லைன் விண்ணப்பம் தயார்!

ABOUT THE AUTHOR

...view details