சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (அக்.20) தலைமைச் செயலகத்தில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.24.92 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மீன் விதைப்பண்ணைகள், உட்கட்டமைப்பு வசதிகள், பனிக்கட்டி உற்பத்தி நிலையம், மீன்பதப்படுத்தும் மையங்கள் உள்ளிட்ட கட்டடங்களைத் திறந்து வைத்தார்.
மேலும், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ரூ.6.75 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள களக்கண்காணிப்பு மற்றும் விவசாயிகளுக்கான தகவல் மையம், கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவுக் கட்டடங்கள் உள்ளிட்ட கட்டடங்களையும் திறந்து வைத்தார்.
மீன் வளத்தைப் பாதுகாத்தல், நிலையான மீன்பிடிப்பு மற்றும் மீன் வளர்ப்பு நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றின் மூலம் மீன் உற்பத்தியை அதிகரிக்கச்செய்தல், மீன்பிடி படகுகளைப்பாதுகாப்பாக நிறுத்துவதற்கும் உள்ளிட்டப் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூரில், 5 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட அரசு மீன் விதைப்பண்ணை மற்றும் புதியதாக கட்டப்பட்டுள்ள பயிற்சி மையம்; திருவள்ளூர் மாவட்டம், பூண்டி அரசு மீன் பண்ணையில் 1.09 கோடி ரூபாய் செலவில் புதியதாக கட்டப்பட்டுள்ள மீன் விதைப்பண்ணை; ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், தொண்டி மீன்இறங்கு தளத்தில் 1.59 கோடி ரூபாய் செலவில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதிகளை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
மேலும், நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக மீன்வளப் பொறியியல் கல்லூரியின் முதல் தளத்தில் 30ஆயிரத்து 602 சதுர அடி பரப்பில் 9 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், கல்லூரி முதல்வர் அலுவலகம், ஆசிரியர்கள் அறை, ஆய்வகங்கள், கருத்தரங்கு அறை, தேர்வு அறை உள்ளிட்டப் பல்வேறு அறைகள் என மொத்தம் ரூ.24.92 கோடி செலவில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.
கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும், கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கும் கால்நடைகளை நன்கு பராமரித்திடவும், மேம்பட்ட தரமான மருத்துவச் சிகிச்சைகளை கால்நடைகளுக்கு அளிக்கவும், கால்நடை பண்ணைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை வாயிலாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் 1 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய களக்கண்காணிப்பு மற்றும் விவசாயிகள் தகவல் மையக் கட்டடம், மாவட்ட கால்நடைப் பண்ணையில் 1 கோடியே 18 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆய்வுக்கூட கருத்தரிப்பு தொழில் நுட்ப மையம் மற்றும் 1 கோடியே 57 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பொலிகாளை கொட்டகைகளை திறந்து வைத்தார்.
தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் 1 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய களக்கண்காணிப்பு மற்றும் விவசாயிகள் தகவல் மையக் கட்டடம், நாமக்கல் மாவட்டம், கூட்டப்பள்ளி மற்றும் திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் தலா ரூ.1 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவுக் கட்டடங்கள் என மொத்தம் 6 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கால்நடை பராமரிப்புத்துறை கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
மீனவர் நலத்துறை சார்பில் ரூ.31.67 கோடி செலவில் கட்டப்பட்ட கட்டடங்கள் திறந்து வைப்பு இந்நிகழ்ச்சியில், மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை முதன்மைச் செயலாளர் ஆ. கார்த்திக், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் டாக்டர் கே.சு.பழனிசாமி, கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் ஆணையர் அ. ஞானசேகரன், தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் கோ. சுகுமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:234 சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களில் இ-சேவை மையங்கள் தொடக்கம்!