நாமக்கல் : சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவருவதையொட்டி தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. தேர்தலை எதிர்கொள்ள அனைத்துக் கட்சிகளும் வியூகங்கள் அமைத்து தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அதைத்தொடரந்து 'வெற்றி நடைபோடும் தமிழகம்' என்ற முழக்கத்தோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று (டிச.29) நாமக்கல்லில் பரப்புரையைத் தொடங்கினார்.
அதன் இரண்டாம் நாளான இன்று (டிச.30) சேந்தமங்கலம் கடைவீதிப் பகுதியில் கூடியிருந்த மக்கள் முன் பேசுகையில், ”சேந்தமங்கலம் பகுதியில் 2011ஆம் ஆண்டுக்கு முன் இருந்த சாலைகளையும் தற்போதுள்ள சாலைகளையும் மக்கள் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
சேந்தமங்கலம் பகுதிக்கு அரசு கலைக் கல்லூரி, புதிய நீதிமன்றம், சாலை வசதி, கல்வி வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளைப் பார்த்து வழங்கி வருகிறோம். ஒவ்வொரு துறைவாரியாகவும் இந்த அரசு சிறப்பாக செயல்பட்டு விருது வாங்கி வருகிறது. ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின் ஒவ்வொரு துறையையும் குறை சொல்லி கரோனா காலத்தில் மக்களை சந்திக்காமல் இணையவழியாகப் பேசிவருகிறார்.
அதிமுக அரசு மக்களுக்கு செய்தவை ஸ்டாலினின் கண்களுக்கு மட்டும் தெரியாது. அவருக்கு ஏழை மக்களை கண்ணுக்குத் தெரியாது. புதிய மருத்துவ உபகரணங்கள் நாமக்கல்லில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு வரப்படும்.