கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கடந்த மார்ச் 25ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் அக்டோபர் 31ஆம் தேதிவரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
வரும் 31ஆம் தேதியுடன் பொது ஊரடங்கு முடியவுள்ள நிலையில், அடுத்த பொது ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வழங்குவது குறித்தும், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் மருத்துவ நிபுணர் குழுவுடனும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
இதில் திரையரங்குகள் திறப்பு, பண்டிகை காலங்கள், மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளதாக தெரிகிறது. பண்டிகை காலம் என்பதால் அதிக தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. பண்டிகை காலம் என்பதால், மாநிலத்தில் திரையரங்குகள் திறக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகத் தெரிகிறது.
நவம்பர் மாதம் கல்லூரிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய ஆலோசனை கூட்டத்துக்குப் பின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.