சென்னை தீவுத்திடலில் ‘மதராசபட்டினம் விருந்து’ என்ற பெயரில் பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் உணவுப் பொருட்களில் கலப்படம் கண்டறிவது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கிவைத்தார்.
‘பாரம்பரிய உணவு முறைகளை கடைப்பிடியுங்கள்’ - முதலமைச்சர் அறிவுரை - chennai
சென்னை: தீவுத்திடலில் ‘மதராசபட்டினம் விருந்து’ என்ற பெயரில் நடைபெறும் மூன்று நாள் உணவு கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கிவைத்தார்.
அப்போது பேசிய அவர், "நமது உணவு என்பது தற்பொழுது அலங்காரப் பொருட்களாக மாறிவிட்டது. நாம் ஆரோக்கியமான வாழ்வு வாழ நம் முன்னோர்கள் உட்கொண்ட உணவினை உட்கொள்ள வேண்டும். முன்பு நாம் சாப்பிட்ட உணவு நன்கு செரித்து பின்னர் பசி எடுத்த பின் உணவு உண்ண வேண்டும். இதனைத் தவறாது கடைப்பிடித்தால் நோய் நம்மை அண்டாது.
இப்போதெல்லாம் இளம் வயதிலேயே ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை வருவதற்கு நாம் உட்கொள்ளும் உணவு பழக்கமே காரணம். நமது அன்றாட வாழ்வில் பாரம்பரிய உணவுப் பழக்கத்துடன் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். ஒருவருக்கு எவ்வளவுதான் செல்வம் இருந்தாலும் அவருக்கு சர்க்கரை நோய் வந்தால் இனிப்புகளை முன்வைத்து பார்க்க முடியுமே தவிர சாப்பிட முடியாது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" எனப் பேசினார்.