முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று (அக்.7) கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், ''புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி ஆகியோரின் அன்புத் தொண்டர்களாகிய உடன் பிறப்புகளுக்கு என் அன்பான வணக்கம்.
ஆழமாய் வேர் விட்டு ஆயிரமாயிரம் கிளைகள் பரப்பி, பூத்து குலுங்குகிற இந்த பொன்மனத்து இயக்கத்தின் சார்பில் 2021ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் வேட்பாளராக உங்கள் அனைவரின் ஆசிகளோடு ஒருமித்த கருத்தால் நான் அறிவிக்கப்பட்டு இருக்கிறேன்.
உழவன் வீட்டில் உதித்த ஒருவனும், உழைத்தால் முதலமைச்சராக முடியும் என்பதற்கு ஜனநாயக சாட்சியாக இந்த எளிமைச் சாமானியனை ஒன்றரை கோடி தொண்டர்களின் இயக்கம் அடையாளப்படுத்தி இருக்கிறது.
இதற்காக என் ஆயுளின் கடைசி விநாடி வரை இந்த இயக்கத்திற்கு நான் நன்றி சொல்லிக் கொண்டே இருப்பேன்.
எண்ணியது செய்திடல் வேண்டும், எதிலும் புண்ணியமே நிறைந்திட வேண்டும், நீதிக்கு தலைவணங்கி நடக்க வேண்டும், நினைத்ததெல்லாம் முடிக்க வேண்டும் என்னும் உயரிய லட்சியங்களை உள்ளத்தில் கொண்டு, புரட்சித்தலைவர் அவர்கள் தன் உதிரத்தின் ஈரத்தில் விதையூன்றிய இயக்கத்தில் ஒரு கடைக்கோடி தொண்டனாக அன்று என் அரசியல் வாழ்வை தொடங்கிய இந்த விவசாயியை, ஊர் நின்று பார்க்கும் அளவுக்கு, உச்சத்துக்கு அழைத்து வந்து, நான் தினந்தோறும் பூஜித்து வணங்கும் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் கனிவுக் கரங்கள் தான்.
அந்த தெய்வத்தாய், எனக்குப் பின்னாலும் நூறு ஆண்டுகள் ஆனாலும் தமிழ் நாட்டை ஆளும் என புனிதமிக்க சட்டப்பேரவையில் தன் கடைசி சூளுரையாய் விடுத்துப் போன சபதத்தை முன்னெடுத்து நிறைவேற்றி முடிப்பதற்கு, என்னை முதலமைச்சர் வேட்பாளராக முன்மொழிந்திருக்கும் கழக ஒருங்கிணைப்பாளர் துணை முதலமைச்சர் அண்ணன் ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கும், தலைமைக் கழக நிர்வாகிகளுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும், பல்வேறு அணிகளை சார்ந்த நிர்வாகிகளுக்கும், கழகமே உலகமென வாழும் கழக உடன்பிறப்புகளுக்கும், இவ்வேளையில் என் நெஞ்சார்ந்த நன்றியை சமர்ப்பிக்கின்றேன்.