மதுரை: எட்டு மாதத்தில் ஆட்சி மாற்றம் நடைபெறும் என்று கூறும் ஸ்டாலின், ஜோசியம் பார்ப்பவராக இருக்கிறார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(செப்.22) நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தை முடித்துவிட்டு, சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி k.பழனிசாமி வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில், ''மத்திய அரசின் வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. விவசாயிகளுக்கு நன்மை பயக்கக்கூடிய திட்டமாகத் தான் இருக்கும்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு தற்போதுள்ள மசோதா ஏற்கனவே தமிழ்நாட்டில் பின்பற்றப்படுகின்றது. மற்ற மாநிலங்களில் இந்த சட்டம் இல்லாததால் தமிழ்நாடு விவசாயிகள் எந்த வகையிலும் கட்டாயப்படுத்தப் படமாட்டார்கள். தமிழ்நாடு மக்கள், விவசாயிகளுக்கு எதிராக எந்த திட்டங்கள் வந்தாலும் அதிமுக எதிர்க்கும்.
பஞ்சாபில் இந்த மசோதாவால் 2 ஆயிரம் கோடி ரூபாய் வரை இடைத்தரகர்களுக்கு இழப்பு ஏற்பட உள்ளது. அதனால் அங்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வேளாண் மசோதாக்கள் குறித்து விவரம் தெரியாமல் ஸ்டாலின் எதிர்த்து வருகிறார். எட்டு மாதத்தில் ஆட்சி மாற்றம் நடைபெறும் என்று ஸ்டாலின் கூறுகிறார்.
ஸ்டாலின் ஜோதிடம் பார்ப்பவராக இருக்கிறார். எங்களுக்கும் கண்டுபிடித்து கூற வேண்டும். ஏனென்றால் நாங்கள் ஜோதிடம் பார்க்கவில்லை. மக்களை தான் நம்புகிறோம். மதுரையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். குறிப்பாக எய்ம்ஸ் மருத்துவமனை, 11 மருத்துவ கல்லூரிகள் வழங்கியுள்ளோம். இதுபோன்று கல்வியில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
14 ஆயிரம் கோடி மதிப்புள்ள காவிரி குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற உள்ளோம். கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் என பல மாவட்டங்களுக்குச் சென்று அங்குள்ள ஏரிகளை நிரப்பும் தடுப்பணை கட்டி வருகின்றோம்.
ஒவ்வொரு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் தங்களது மாவட்டத்தை தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்'' என்றார்.
இதையும் படிங்க:சிறு பொறிகள் தீப்பிழம்பாக மாறிவிடும்" - இந்தி தெரியாததால் கடன் மறுக்கப்பட்ட விவகாரத்தில் மு.க. ஸ்டாலின்