தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் கைத்தறி, துணி நூல்துறை குறித்த புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார். அந்த அறிவிப்பில், "கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள நெசவாளர்கள் பெற்று வரும் அகவிலைப்படியில் 10 சதவிகிதம் உயர்த்தி வழங்கப்படும்" என்று குறிப்பிட்டார்.
கைத்தறி நெசவாளர்களின் அகவிலைப்படி 10% உயர்வு - முதலமைச்சர் அறிவிப்பு! - கைத்தறி நெசவாளர்களுக்கான ஊதியம் உயர்வு
சென்னை: "கைத்தறி நெசவாளர்களின் அகவிலைப்படியில் 10 சதவிகிதம் உயர்த்தி வழங்கப்படும்" என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேலும், "விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் கூலியை, சேலை ஒன்றுக்கு 39 ரூபாய் 27 காசில் இருந்து 43 ரூபாய் ஒரு காசாகவும், வேட்டி ஒன்றுக்கு 21 ரூபாய் 60 காசில் இருந்து 24 ரூபாயாகவும் உயர்த்தப்படும். பெடல் தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் கூலி, சேலை ஒன்றுக்கு 85 ரூபாய் 67 காசில் இருந்து 90 ரூபாய் 29 காசாகவும், வேட்டி ஒன்றுக்கு 65 ரூபாய் 75 காசில் இருந்து 69 ரூபாய் 58 காசாகவும் உயர்த்தப்படும்.
அதேபோல், கூலி மீட்டர் ஒன்றுக்கு 11 ரூபாய் 32 காசில் இருந்து 12 ரூபாய் 16 காசாகவும் அரசால் வழங்கப்படும். இதனால் தமிழ்நாடு முழுவதும் 54 ஆயிரம் விசைத்தறி மற்றும் 10 ஆயிரத்து 500 பெடல் தறி கூலித் தொழிலாளர்கள் பயன் அடைவார்கள்" என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
TAGGED:
கைத்தறி நெசவாளர்