சென்னை: பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், அன்பழகன், கல்வித் துறை அலுவலர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
இம்மாதம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கும் என்று அறிவித்திருந்த நிலையில், நவம்பர் 16ஆம் தேதி ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறக்க முதலமைச்சர் அனுமதியளித்தார்.
இதற்குப் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், இன்று அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் கல்லூரிகளைத் திறப்பது குறித்து உயர் கல்வித் துறை மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், உயர் கல்வித் துறை அலுவலர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
அப்போது, விடுதிகள் திறப்பதில் உள்ள சிக்கல்கள், கல்லூரிகளைத் திறந்து மாணவர்களை மொத்தமாக வரவழைப்பதன் மூலம் ஏற்படும் சாதக பாதகங்கள், கல்லூரிகளில் அமைக்கப்பட்ட கரோனா தனிமைப்படுத்தும் மையங்களைச் சுத்தம் செய்வது என கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டுன.
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்பு பேசிய அமைச்சர் கேபி அன்பழகன்,"தமிழ்நாட்டில் கல்லூரிகள் திறப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. பண்டிகை காலம் முடிந்தவுடன் கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும் என மருத்துவத் துறையினர் எச்சரிக்கை செய்கின்றனர்.
இந்நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து வரும் 9ஆம் தேதி கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படுகிறது. அதில் வரும் பல்வேறு கருத்துகளின் அடிப்படையில் கல்லூரிகளைத் திறப்பது குறித்து 12ஆம் தேதிக்கு மேல் முடிவுசெய்து அறிவிக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க:கரோனா விதிகளை மீறும் திரையரங்குகள் மீது நடவடிக்கை - அமைச்சர் கடம்பூர் ராஜு