தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ. 2,371 கோடியில் அடையாறு நதி சீரமைப்பு: முதலமைச்சர் அறிவிப்பு - edappadi palanisamy

சென்னை: ரூ. 2,371 கோடி செலவில் அடையாறு நதி சீரமைப்பு, சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு குறித்த திட்ட அறிக்கை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் பழனிசாமி இன்று வெளியிட்டார்.

cm

By

Published : Jul 11, 2019, 12:41 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை குறித்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது, ‘சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம் அடையாறு, கூவம் நதிகளுக்கான சுற்றுச்சூழல் சீரமைப்புத் திட்டங்கள் தற்போது நடைபெற்றுவருகின்றன.

கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் மற்றும் இதனைச் சேர்ந்த பிரதான நீரோடைகளில் கழிவுநீர் கலப்பதை இடைமறித்தல், மாற்று வழிகளை அமைத்தல், இடத்திற்கு ஏற்ப ஆங்காங்கே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல், கழிவுநீர் உந்து நிலையங்கள் அமைத்தல், தற்போதுள்ள சென்னை கழிவுநீர் உள்கட்டமைப்புகளை புதுப்பித்தல், வலுப்படுத்துதல் போன்ற பணிகளை செயல்படுத்த, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல், கழிவுநீரகற்று வாரியத்தால் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, 2019 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் செயல்படுத்தும் இத்திட்டத்திற்கு சுமார் 2,371 கோடி ரூபாய் செலவாகும் என திட்டமிடப்பட்டு, இத்திட்டம் நடைமுறைப்படுத்தும்.

வேகமான நகரமயமாதல், தொழில் மயமாதல் போன்ற காரணங்களால், தமிழ்நாட்டில் குடிநீர்த் தேவை தொடர்ந்து அதிகரித்துவரும் அதே வேளையில், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல காரணங்களால் தொடர்ச்சியாக பருவமழை பொய்த்து, நீர்வளம் குறைந்துவருகிறது. இந்த சூழலை சிறப்பாக எதிர்கொள்வதோடு மட்டுமல்லாமல், நீர்நிலைகள் மாசுபடுவதை தவிர்ப்பது, தொழிற்சாலை - இதர பயன்பாடுகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீரை உபயோகிப்பது, கழிவுநீர் மறு உபயோகக் குழாய் கட்டமைப்பைத் தேர்வு செய்வது உள்ளிட்ட வழிமுறைகளைக் கொண்ட ஒருங்கிணைந்த கொள்கையை அரசு உருவாக்கும்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொலைநோக்குத் திட்டம் 2023இல், கழிவுநீரினை சுத்திகரிப்பு செய்து மறுசுழற்சி செய்வது ஒரு அங்கமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை நடைமுறைப்படுத்தி, நிலத்தடி நீர் மட்டத்தை பெருக்கிடவும், நீர் வழங்கல் ஆதாரங்களை அதிகரிப்பதற்கு நிரந்தர - நிலையான தீர்வுகளைக் கண்டறிவதற்கும், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல், கழிவுநீரகற்று வாரியம், 260 மில்லியன் லிட்டர் கழிவுநீரை மூன்றாம் நிலை சுத்திகரிப்பின் மூலம் சுத்திகரித்து, மறுபயன்பாட்டிற்காக சென்னை, அதனைச் சுற்றியுள்ள நீர்நிலைகளில் விடுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும்.

அதேபோல், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திருச்சி ஆகிய மாநகராட்சிகளில் உள்ள நீர் நிலைகளில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க, சுத்திகரிப்பு செய்யப்பட்ட கழிவுநீரினை மறு சுழற்சி செய்து தொழிற்சாலைகள், நிலத்தடி நீர் செறிவூட்டுதல் போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கு உபயோகிக்கும் சாத்தியக் கூறுகளைக் கண்டறிய, உரிய ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

கோவை மாநகராட்சி, தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய மாநகராட்சியாகும். இங்கு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், வெள்ளலூரில் 61.62 ஏக்கர் பரப்பளவில், 178.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அரசு மானியம் - உள்கட்டமைப்பு நிதி நிறுவனங்களிடமிருந்து நிதி உதவி பெற்று நடப்பு நிதியாண்டில் ஒரு ஒருங்கிணைந்த நவீன பேருந்து நிலையம் அமைக்கப்படும்’ என அறிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details