தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடல் .. கல்விக்கு தாழ்ப்பாள் போடும் தமிழ்நாடு அரசு - குழப்பத்தில் பெற்றோர்!

தமிழ்நாட்டில் 2,381 அங்கன்வாடி மையங்களில் ஆரம்பிக்கப்பட்ட எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் இனி மாணவர் சேர்க்கை நடைபெறாது எனப் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது பெற்றோர், கல்வி ஆய்வாளர்கள் மத்தியில் குழப்பம் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடல் .. கல்விக்கு தாழ்ப்பாள் போடும் தமிழ்நாடு அரசு - குழப்பத்தில் பெற்றோர்கள்!
எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடல் .. கல்விக்கு தாழ்ப்பாள் போடும் தமிழ்நாடு அரசு - குழப்பத்தில் பெற்றோர்கள்!

By

Published : Jun 7, 2022, 12:03 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வருவதை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக கடந்த அதிமுக ஆட்சியின்போது, 2018ஆம் கல்வி ஆண்டில் 2,381 நடுநிலைப் பள்ளிகளின் அருகில் உள்ள அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

சமூக நலத்துறையால் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் நடத்தப்படும் அங்கன்வாடி மையங்களில் பத்தாம் வகுப்பு தகுதி பெற்றவர்கள் குழந்தைகளை பாதுகாத்துக் கொள்வதற்காக ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எனவே, இங்கு சேரும் மாணவர்களுக்கு தொடக்கக் கல்வித்துறையில் உபரியாக இருந்த ஆசிரியர்களை பணியிடமாற்றம் செய்து பாடம் நடத்தி வந்தனர்.

இதற்கு பெற்றோரிடம் பெரிய அளவில் வரவேற்பு இருந்தது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் தங்கள் குழந்தைகளையும் சேர்த்தனர். மேலும் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு தேவையான பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டதுடன், கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டன.

இதில் சேரும் மாணவர்களுக்கு சீருடைகளும் சமூக நலத்துறை மூலம் வழங்கப்பட்டது. சோதனை முறையில் செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், படிப்படியாக அனைத்து பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படும் என அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வரும் கல்வியாண்டில் சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் அங்கன்வாடி மையங்களில் பள்ளி கல்வித்துறையின் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறாது எனவும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மட்டுமே மாணவர்கள் தொடர்ந்து சேர்க்கப்பட்டு அவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடக்க கல்வித்துறையில் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்ததால், ஏற்கனவே பணியிடமாற்றம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மீண்டும் தொடக்கக் கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களில் நிரப்பப்பட்டுள்ளனர். இதன் காரணமாக 2,381 அங்கன்வாடி மையங்களில் ஆரம்பிக்கப்பட்ட எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் மாணவர்களுக்கு கற்பிக்க முறையான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறையின் இந்த நடவடிக்கை காரணமாக, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறையும் சூழல் உருவாகியுள்ளது. நடப்பாண்டில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படாத நிலையில் மூடப்படுவது உறுதியாக இருக்கின்றது. இந்த தகவலை பள்ளிக்கல்வித்துறை மற்றும் சமூக நலத்துறை அலுவலர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க:மத்திய அரசு நடத்தும் கல்வி அமைச்சர்கள் மாநாட்டை புறக்கணித்த தமிழ்நாடு!

ABOUT THE AUTHOR

...view details