சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் கடலோரக் காவல் படை இணைந்து மெரினா கடற்கரையில் "தீவிர தூய்மைப் பணி" முகாம் நடைபெற்றது. இதில் பல்வேறு தரப்பினர் பங்கேற்று சென்னை மெரினா கடற்கரையை சுத்தம் செய்தனர். பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், ‘தூய்மை சென்னை’ என்ற திட்டத்தின் மூலம் சென்னையை தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், பல்வேறு இடங்களில் தூய்மை பணி நடைபெற்று வருகிறது. மேலும், நீர்நிலைகளை சுத்தம் செய்தல், மயான பூமிகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தில் சென்னை மெரினா கடற்கரையில், தன்னார்வலர்கள், மாணவர்கள், பொது மக்கள், மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டு மெரினாவை சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இதை பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர். இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பில், "பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் மாதத்தின் 2 மற்றும் 4 ஆம் சனிக்கிழமைகளில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தக் கூடிய பகுதிகளான பூங்காக்கள், பள்ளி வளாகங்கள், பேருந்து நிறுத்தங்கள், மார்க்கெட் பகுதிகள், வணிக வளாகங்கள் மற்றும் பொதுக் கழிப்பிடங்கள் உள்ள அமைவிடங்களில் தீவிர தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் தன்னார்வ அமைப்புகள், குடியிருப்போர் நலச் சங்கங்கள், மக்கள் பிரிதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.