சென்னை மாநகராட்சியில் கீழ் உள்ள துப்புரவு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது, ஜனவரி மாதம் முதல் 6 மாதங்கள் வழங்க வேண்டிய அகவிலைப்படி நிலுவை தொகையையும், உயர்த்தப்பட்ட அகவிலைப்படியையும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை மாநகராட்சி அனைத்து துறை ஊழியர்கள் சங்கம் பி.எம்.எஸ் சார்பில், சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று (டிச.14) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த பிஎம்எஸ் தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் புருஷோத்தமன், மாநகராட்சியில் மொத்தம் 26 ஆயிரம் ஒப்பந்தம் மற்றும் தற்காலிக பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அதில் உள்ள ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்றார்.
திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது போல பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அமல்படுத்த வேண்டும். கடந்த ஆட்சியின்போது சென்னை மாநகராட்சியில் நடைபெற்ற முறைகேடுகளை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.