சென்னை:கரோனா பெருந்தொற்று காரணமாக 2020-2021ஆம் கல்வியாண்டில் நடக்கவிருந்த 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் முறை குறித்து விளக்கமளித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.
மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவதற்கான வழிகாட்டு குழுவையும் நியமித்தார். மதிப்பெண் வழங்கும் முறை குறித்த அறிக்கையை ஜூன் 25ஆம் தேதி முதலமைச்சரிடம் அக்குழு வழங்கியது.
அதனை ஆய்வு செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் வழங்குவதற்குரிய முறைகளை வெளியிட்டார்.
மதிப்பெண் வழங்கும் முறை
அதில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் உயர் மதிப்பெண் பெற்ற மூன்று பாடங்களுடைய சராசரி மதிப்பெண்ணில் 50 விழுக்காடு, 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற எழுத்து தேர்வில் இருந்து மட்டும் 20 விழுக்காடு மதிப்பெண், 12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு, அக மதிப்பீட்டில் இருந்து 30 விழுக்காடு மதிப்பெண் கணக்கிடப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.
மேலும், கடந்த ஆண்டு 11ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வில் ஏதேனும் பாடங்களில் தோல்வி அடைந்திருந்தாலோ, தேர்வு எழுத இயலாத நிலை இருந்து இருந்தாலோ அந்த மாணவர்களுக்கு தற்போது அத்தேர்வுகளை மீண்டும் எழுத வாய்ப்பு இல்லாத நிலையை கருத்தில் கொண்டு 35 விழுக்காடு மதிப்பெண் வழங்கப்படும் என அறிவித்தார்.