சென்னை: நேற்று (மே 15) தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டுவிட்டர் பதிவு ஒன்றினை போட்டிருந்தார். தமிழ்த்தாய் என எழுதப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அப்பதிவில், “எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே” எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், அண்ணாமலை வெளியிட்ட படத்தில் வட மொழி எழுத்து கலந்திருப்பதாக கூறி விமர்சித்தார்.
இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு, “தமிழணங்கைப் போற்றுகிறோம் என்ற போர்வையில், தமிழ் எழுத்துகளுடன் ‘ஸ’ வையும் இணைத்துப் படம் போடும் போதே உங்களின் கூப்பிய கரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள் தன் உண்மை முகத்தைக் காட்டி விட்டது. இதைத்தான் ‘தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்’ என வள்ளுவர் அடையாளம் காட்டிப் போனார்.” என பதிவிட்டிருந்தார். இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு டுவிட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார்.
அதில், “தமிழகத்தின் தொழில்துறை அமைச்சர் நாங்கள் வெளியிட்ட தமிழன்னையின் படத்தில் உள்ள "ஸ" என்ற எழுத்தைக் கண்டெடுத்து விமர்சித்ததாக அறிகிறேன். "தமிழ் தமிழ்" என்று முழக்கமிடும் தமிழக முதல்வரின் பெயரில் உள்ள முதல் எழுத்தை வைத்தமைக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவிப்பது வியப்பாக உள்ளது!