சென்னை : பல மாதங்களுக்கு பிறகு நேற்று (செப்.1) கல்லூரிகள் திறக்கப்பட்டன. முதல் நாள் என்பதால் மாநில கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, நந்தனம் கல்லூரியில் பயிலக்கூடிய சில மாணவர்கள் பஸ் டே கொண்டாட இருப்பதாக நுண்ணறிவு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அனைத்து பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் காலை பெரம்பூர் பேருந்து நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கையில் பேனருடன் பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட முயன்றபோது செம்பியம் காவல் துறையினர் எட்டு மாணவர்களை பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் நேற்று (செப்.1) மாலை கல்லூரி முடிந்தவுடன் சென்ட்ரல் நிலையத்தில் ரயிலுக்காக மாநில கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சுமார் 50 நபர்கள் காத்திருந்தனர். அப்போது இரு கல்லூரி மாணவர்களிடையே வாய் தகராறு ஏற்பட்டு கோஷமிட்டனர். இதனால் பயணிகள் பலரும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இரு கல்லூரி மாணவர்களிடையே மோதல் இதனையடுத்து பாதுகாப்பு பணியிலிருந்த ரயில்வே பாதுகாப்பு படை காவல் துறையினர் மாணவர்களை விலக்கிவிட்டனர். இதனையடுத்து அந்த மாணவர்கள் ஓடும் ரயிலிலேயே கோஷமிட்டபடி சென்றனர். ரயிலானது கொரட்டூர் ரயில் நிலையம் அருகே சென்ற போது மாணவர்கள் செயினை இழுத்து ரயிலை நிறுத்தி மீண்டும் மோதலில் ஈடுபட்டனர். இதனையடுத்து ரயில்வே பாதுகாப்பு படை காவல் துறையினர் சமாதானம் செய்தும், எச்சரித்தும் கல்லூரி மாணவர்களை அனுப்பி வைத்தனர். பின்னர், அனைத்து ரயில் நிலையங்களிலும் ரயில்வே காவல் துறையினர், ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரிகள் திறந்த முதல் நாளிலேயே கல்லூரி மாணவர்களிடையே நடந்த மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையும் படிங்க : 'பஸ் டே' கொண்டாட்டத்திற்குத் தடை - தீவிர கண்காணிப்பில் காவல் துறை